அகமதாபாத் சம்பவம்
அகமதாபாத் சம்பவம் ட்விட்டர்
இந்தியா

குஜராத்: தலைமுடியைப் பிடித்து, ஆடையைக் கிழித்து பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய நபர்! வைரல் வீடியோ!

Prakash J

நாட்டில் பெண்கள் பலர், உயர்ந்த நிலைகளில் இருந்தாலும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளும் பாலியல் வன்புணர்வுகளும் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணமே உள்ளன. அதற்குச் சமீபத்திய உதாரணம் நேற்று மத்தியப் பிரதேசத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உதவிக்காக உஜ்ஜயினி சாலையில் அலைந்த கொடூரக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அகமதாபாத் சம்பவம்

இந்த நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் பெண் ஒருவரை, கொடூரமாக ஆண் நபர் ஒருவர் தாக்குவதும், பின் அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்துச் செல்லும் காட்சிகளும் சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளன. அந்தப் பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவரும் எதிர்த்து தாக்குகிறார். ஆனால், ஆண் நபரோ தொடர்ந்து அவரைத் தாக்குகிறார்.

மேலும், அந்தப் பெண் உதவிக்கு ஒருவரை அழைக்கிறார். அவரும் ஓடிச் சென்று உதவுகிறார். இருவரையும் தடுத்து விடுகிறார். தவிர, உதவிக்கு வந்தவரையும் மிரட்டுகிறார். தொடர்ந்து அந்த ஆண் நபர், பெண்ணைச் சரமாரியாகத் தாக்குகிறார். தற்போது அந்தக் காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பேரில், இந்தச் சம்பவம் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஸ்பா வணிக தளத்தின் வளாகத்தில் நடைபெற்றுள்ளது எனவும், ஸ்பா உரிமையாளர்களில் ஒருவர்தான் அந்தப் பெண்ணைத் தாக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீசார், “அகமதாபாத்தில் கேலக்ஸி ஸ்பாவின் உரிமையாளராக மொஹ்சின் என்பவர் உள்ளார். இவருடைய வணிக கூட்டாளிதான் அந்தப் பெண். இருவருக்கும் இடையே கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இதில்தான் அந்தப் பெண்ணை, மொஹ்சின் தாக்கியுள்ளார். அந்த வீடியோ காட்சிகள்தான் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது.

எனினும், தாக்குதலுக்கு ஆளான அந்தப் பெண் போலீசில் புகார் அளிக்கவில்லை. பின்னர் சமூகச் சேவகர் ஒருவரின் ஆலோசனையின் பேரிலேயே கடந்த செப். 27ஆம் தேதி மொஹ்சின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது மொஹ்சின் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.