இந்தியா

இணைய வசதியில்லை; பயிற்சி வகுப்பு இல்லை - ஜேஇஇ தேர்வில் 89.11% மதிப்பெண் எடுத்த மாணவி

webteam

இணைய வசதியில்லை; பயிற்சி வகுப்பு இல்லை - ஜேஇஇ  தேர்வில் 89.11% மதிப்பெண் எடுத்த மாணவி

இணைய வசதியில்லாமலும், பயிற்சி வகுப்புக்கு செல்லாமலும் பழங்குடி மாணவி ஒருவர் ஜேஇஇ  மெயின் தேர்வில் 89.11 சதவீத மதிப்பெண் எடுத்து சாதனைப் படைத்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், மாஞ்சேரியல் கோல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மதுநய்யா மற்றும் ஸ்ரீலதா தம்பதியின் மகள் நைனி மமதா. ஜேஇஇ  மெயின் தேர்விற்கு தயாராகி வந்த மமதாவின் பெற்றோருக்கு விவசாயம் தான் பிரதானத் தொழில். இதன் காரணமாக அவர்களால் மமதாவிற்கு ஸ்மார்ட் போன்வாங்கித்தரமுடியவில்லை. இருப்பினும் 4 மாத ஊரடங்கு காலத்தை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட மமதா ஜேஇஇ  மெயின் தேர்வில் 89.11 சதவீத மதிப்பெண்ணை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

குடும்பத்தில் முதல் உறுப்பினராக கல்வி பயின்ற மமதா இது குறித்து கூறும் போது “ நான் 90 சதவீத மதிப்பெண்ணை எதிர்பார்த்தேன். 89.11 சதவீத மதிப்பெண் கிடைத்தது சற்று ஏமாற்றம் தான். எனது பெற்றோருக்கு கல்வி கிடைக்கவில்லை என்பதால், என்னை தொடர்ந்து நன்றாகப் படிக்க வேண்டும் என அவர்கள் ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பர். தற்போது அவர்கள் மிக மகிழ்ச்சியாக உள்ளனர். ஜேஇஇ  மெயின் தேர்விற்காக தினமும் எட்டு மணி நேரத்தை செலவிட்ட நான் எனக்கு நானே தேர்வுகளை வைத்துக்கொண்டு சோதனை செய்து கொண்டேன்.

இது குறித்து மமதா பயின்று வரும் கல்லூரி பேராசிரியர் கூறும் போது “ கடந்த நான்கு மாதங்களாக அவர் எங்களுடன் தொடர்பில் இல்லை. ஸ்மார்ட் போன் இல்லாததால் அவருக்கு எங்களால் ஆன்லைன் மூலமும் பயிற்சி அளிக்க முடியவில்லை. தேர்விற்கு,15 நாட்களுக்கு முன்புதான் அவரை கல்லூரி விடுதிக்கு வர வைத்து பயிற்சி அளித்தோம்.

இது குறித்து மமதாவின் ஆசிரியர் அருணா கூறும் “ அவருக்கு கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் அதிக ஆர்வம் இருந்தன. ஆங்கிலம் அவருக்கு கொஞ்சம் கடினமாக இருந்தது." என்றார்.

தெலங்கானா சமூக மற்றும் பழங்குடியினர் நல குடியிருப்பு கல்வி நிறுவனங்கள் கீழ் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜேஇஇ  மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.