india bloc
india bloc pt web
இந்தியா

டெல்லி: “EVM, மேட்ச் ஃபிக்சிங் இல்லையெனில் பாஜக 180 இடங்களில் கூட வெல்லாது” - ராகுல் காந்தி

PT WEB

நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பை காப்பாற்றுவோம் என டெல்லியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல் காந்தி, இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனில் நாட்டின் ஜனநாயகம் சிதைக்கப்படும் என தெரிவித்தார்.

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம் உள்ளிட்டவற்றை கண்டித்து தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் சார்பில் ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல் காந்தி, “பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசின் வங்கிக் கணக்குகளை முடக்குவதன் மூலம், பாஜகவால் ஒருபோதும் தனது குரலை ஒடுக்க முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மேட்ச் பிக்சிங், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவை இல்லையென்றால் பாஜகவால் 180 இடங்களில் கூட வெல்ல முடியாது. இந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்று அரசியல் சாசனத்தை மாற்றினால் நாடு பற்றி எரியும். இந்திய கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டால் நாட்டின் ஜனநாயகம் சிதைக்கப்படும்” என தெரிவித்தார்.

டெல்லி கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரையை திமுக எம்.பி. திருச்சி சிவா வாசித்தார். அதில், “எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த போராடுவோம்” என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சரத் பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, தேஜஸ்வி யாதவ், டி. ராஜா, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.