கேரளாவில் புகைப்படக்கலைஞர் ஒருவர் வித்தியாசமான மாஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற வார்த்தை இன்று உலக நாடுகளிடையே ஒலித்துக்கொண்டு இருக்கிறது. முதன்முதலாக கொரோனா என்ற தொற்று பரவுவதாகவும், இது வூகான் மாகாணத்தில் ஒருவருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் கடந்த டிசம்பர் மாதம் சீனா கூறியது.
அதுவரை உலக மக்கள் கேட்டு பழக்கப்படாத கொரோனா என்ற வார்த்தை இன்று கடைகோடி கிராமம் வரை எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் கொரோனாவுடன் வாழப் பழகுங்கள் என அரசுகள் கூறுகின்றன. கொரோனாவுக்கு பிறகான உலகம் சற்று வித்தியாசமாக இருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாஸ்க் என்பதும் அத்தியாவசியம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் கேரளாவில் புகைப்படக் கலைஞர் ஒருவர் வித்தியாசமான மாஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதாவது மாஸ்க்கிலேயே முகத்தில் பாதியை பிரிண்ட் செய்து உருவாக்கி வருகிறார். இதன் மூலம் மாஸ்க் அணிந்திருப்பவர் யார் என்பது எளிதில் மற்றவருக்கு தெரிந்துவிடும். இந்த வித்தியாசமான முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதாக புகைப்படக்கலைஞர் பினூஷ் ஜிபால் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கோட்டயம் பகுதியில் சொந்தமாக ஸ்டூடியோ வைத்துள்ளார் பினூஷ். மாஸ்க்கில் முகத்தை பிரிண்ட் செய்ய 20 நிமிடம் போதும் என்றும், இது ஒரு மாஸ்க் ரூ60க்கு விற்பனையாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது 5000 மாஸ்குகளுக்கு ஆர்டர் வந்திருப்பதாகவும் பினூஷ் தெரிவித்துள்ளார்.