புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் என கேரள பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கேரள ரிப்போர்ட்டர்ஸ் அண்ட் மீடியா பெர்சன்ஸ் யூனியன் மாநில தலைவர் பி.கே.ஹாரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதியதலைமுறை மீதான வழக்குப்பதிவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு , வழக்கை திரும்ப பெற வேண்டுமென கூறியுள்ள கேரள பத்திரிகையாளர் சங்கம், இது போன்ற வழக்குகளால் அண்டை மாநிலங்களில் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என தெரிவித்துள்ளது.
முன்னதாக புதிய தலைமுறை சார்பில் கோவையில் வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (08-06-2018) நடைபெற்றது. விவாத நிகழ்வு குறித்து காவல்துறைக்கு புதிய தலைமுறை சார்பில் தகவலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கோவை நவ இந்தியா எஸ்.என்.ஆர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விவாத நிகழ்வில் ஞானதேசிகன், தமிழிசை சவுந்தரராஜன், செ.கு.தமிழரசன், செம்மலை, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.பாலகிருஷ்ணன், தனியரசு, அமீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனிடையே இந்நிகழ்ச்சி தொடர்பாக கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புதிய தலைமுறை நிர்வாகம் மற்றும் அதன் செய்தியாளர் சுரேஷ் குமார், நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.