தீபாவளியில் இருந்தாவது மக்கள் மீது மத்திய அரசு கரிசனம் காட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசலின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரபிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, ஒடிஷா, ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோலின் விலை 100 ரூபாய்க்கும் மேல் விலை உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மும்பையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 115.85க்கும் டீசலின் விலை ரூ.106.62 க்கும் விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டரின் பெட்ரோல் விலை ரூ.106.66க்கும் டீசல் விலை ரூ.102.59 க்கும் விற்கப்படுகிறது.
தொடர்ந்து பெட்ரோல், டீசலின் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியத் தேவைக்கான பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. வாடகை வண்டி ஓட்டுநர்களும் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தீபாவளியில் இருந்தாவது மக்கள் மீது மத்திய அரசு கரிசனம் காட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தீபாவளியின்போது பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. இது நகைச்சுவை அல்ல. தீபாவளியில் இருந்தாவது மக்கள் மீது மோடியின் மத்திய அரசு கரிசனம் காட்ட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராகுல்காந்தி கடந்த திங்கள் கிழமை பதிவிட்ட ட்விட்டில், “பிக்பாக்கெட்காரர்களிடம் ஜாக்கிரதை” எனக்கூறி வரிப்பணம் பறித்தல் என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தியிருந்தார். மேலும், அவர் ட்வீட்டில் வெளியிட்டிருந்த செய்தியில், சில மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 120 -ஐ தாண்டியுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. மத்திய அரசு 2018 - 2019 ஆம் ஆண்டில் ரூ. 2.3 லட்சம் கோடியும் 2017 - 2018 ஆம் ஆண்டில் ரூ. 2.58 லட்சம் கோடியும் எரிபொருள் மூலம் வரி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.