விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா முன்பு ஆஜாராகி விமானி அபிநந்தன் விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்க வந்த பாகிஸ்தான் விமானத்தையும் விரட்டியடித்தனர். அப்போது தமிழகத்தை சேர்ந்த இந்திய விமானியான அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.
இதனையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி அபிநந்தனை விடுவிக்கப்படுவார் என்று அறிவித்தார். அதன்படி பாகிஸ்தானின் ராவல் பிண்டி ராணுவ முகாமிலிருந்த அபிநந்தன் லாகூருக்கு நேற்று மாலை 4 மணியளவில் கொண்டு வரப்பட்டார். பின்னர் வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்ட அபிநந்தனை இரவு 9.10 மணிக்கு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அபிநந்தனுக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அபிநந்தனிடம் விசாரணை நடத்தப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா முன்பு ஆஜாராகி விமானி அபிநந்தன விளக்கம் அளித்துள்ளார். பாகிஸ்தான் வசம் இருந்தபோது என்ன நடந்தது என்பது பற்றி தளபதியிடம் அபிநந்தன் விளக்கம் அளித்தார்.