மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா, மாநிலத்தின் பெயரை “பஸ்சிம் பங்கா” (Paschim Banga) என மாற்றுவதற்கான மசோதா, மாநில சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மாநிலத்தின் வரலாற்றுடன் பெயரை இணைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
பொதுவாக, மேற்கு வங்கம் என்ற மாநிலம், வங்க மொழியில் அம்மாநில மக்களால், பஸ்சிம் பங்கா (Paschim Banga), பங்கா (Banga) மற்றும் பங்களா (Bangla) உள்ளிட்ட பெயர்களாலும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்தச்சூழலில் தான்,மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக ”பஸ்சிம் பங்கா” என பெயர் மாற்றம் செய்ய மசோத கொண்டு வரப்படும் என பாஜக மாநிலத் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், மேற்கு வங்கத்தின் பெயரை மாற்றும் முயற்சி இப்போது தொடங்கியது அல்ல. 1999-ம் ஆண்டிலேயே ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு, மாநிலத்தின் பெயரை “பஸ்சிம் பங்கா” என மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசும் பெயர் மாற்ற முயற்சிகளை மேற்கொண்டது. 2011-ல் “பஸ்சிம் பங்கா” என்ற பெயரும், 2018-ல் பங்களா” என்ற பெயரை மட்டும் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பெயராக மாற்றும் தீர்மானத்தையும் சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றியது திரிணாமுல் காங்கிரஸ். ஆனால், மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காததால் அந்த முயற்சிகள் நடைமுறைக்கு வரவில்லை.
இந்நிலையில், மீண்டும் “பஸ்சிம் பங்கா” என்ற பெயர் முன்னிலைக்கு வந்துள்ளது. இதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டாலும், மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பெயரை மாற்றுவதற்கு அடுத்தகட்ட அரசியலமைப்பு நடைமுறைகளும் மத்திய அரசின் ஒப்புதலும் முக்கியமானதாக இருக்கும். எனினும், மத்தியிலும் பாஜக அரசு இருப்பதால், பெயர் மாற்றம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிரது.