இந்தியா

திருப்பதி ஏர்போர்ட்டில் தண்ணீர் சப்ளையை துண்டித்த எம்எல்ஏ மகன் - மத்திய அமைச்சர் விளக்கம்

திருப்பதி ஏர்போர்ட்டில் தண்ணீர் சப்ளையை துண்டித்த எம்எல்ஏ மகன் - மத்திய அமைச்சர் விளக்கம்

Veeramani

ஆந்திர எம்எல்ஏவின் மகன் திருப்பதி விமான நிலையத்திற்கு தண்ணீர் சப்ளையை துண்டித்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்

ஆந்திர பிரதேச எம்எல்ஏ பி.கருணாகர் ரெட்டியின் மகனான திருப்பதி துணை மேயர் அபிநயா ரெட்டி, திருப்பதி விமான நிலையம் மற்றும் ஊழியர்கள் குடியிருப்புகளுக்கான நீர் விநியோகத்தை துண்டித்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். மேலும், "நாங்கள் இப்பிரச்சினையை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுப்போம். விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் இனி எந்த சிரமத்தையும் சந்திக்க மாட்டார்கள்" என தெரிவித்தார்.

முன்னதாக, ராஜ்யசபா எம்பி ஜிவிஎல் நரசிம்ம ராவ், இந்த சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணைக் கோரி மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த வாரத்தில், திருப்பதி விமான நிலையம் மற்றும் ஊழியர்கள் குடியிருப்புகளுக்கான தண்ணீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டது. விமான நிலைய மேலாளர் சுனிலுக்கும், திருப்பதி துணை மேயர் அபிநயா ரெட்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து இது நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக குடிநீர் விநியோகம் தடைபட்டதாக திருப்பதி நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.