இந்தியா

சீனாவை முந்தப்போகிறது இந்தியாவின் மக்கள் தொகை? தரவுகள் சொல்லும் காரணம்!

நிவேதா ஜெகராஜா

சமீபத்தில் கிடைத்திருக்கும் சில தரவுகளும், தகவல்களும் விரைவில் இந்தியா சீன மக்கள் தொகையை கடந்துவிடும் என்று தெரிவித்துள்ளது. உண்மையில் மனித வளத்தில் உலக அளவில் இந்தியாவின் நிலை என்ன? இந்திய அளவில் தமிழ்நாட்டின் நிலை என்ன? இதுபற்றி விவரங்கள், இங்கே!

1) உலகளவில் சீனாவின் மக்கள் தொகை 147 கோடியை தாண்டி விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் நாடான சீனாவை விரைவில் இந்தியா மிஞ்சிவிடும் எனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2) சீனாவின் மக்கள் தொகை 2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு மெல்ல குறையத்தொடங்கும் எனவும், அப்போது சீனா உலகின் அதிக மக்கள் உள்ள நாடு என்கிற தனது கிரீடத்தை இந்தியாவுக்கு சூட்டி விடும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

3) இதற்கு முக்கிய காரணம் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது தான். கடந்த பத்து ஆண்டுகளில் சீனாவின் மக்கள் தொகை வெறும் 7.2 கோடி மட்டுமே அதிகரித்துள்ளது.

4) இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் 1978-ல் ஆயிரம் பேருக்கு 41 குழந்தைகள் பிறப்பு என்பதாக இருந்து, 1995-ல் 28 என்றாகி தற்போது 18.2 ஆக குறைந்திருக்கிறது.

5) இந்தியர்களின் தற்போதைய சராசரி ஆயுட்காலம் 69. ஒரு சராசரி சீனர் ஒரு சராசரி இந்தியரை காட்டிலும் எட்டு ஆண்டுகள் அதிகம் வாழ்கிறார். அதே நேரத்தில் இந்தியாவில் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை அடுத்த சில வருடங்களில் மேலும் அதிகரிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

6) 2011-ல் 8.6 சதவீதமாக இருந்த இந்தியாவின் முதியோர்களின் (60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர்) எண்ணிக்கை, 2041-ல் இரட்டிப்படையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2041-ஆம் ஆண்டில் வருடாந்திர மக்கள் தொகை பெருக்கத்தில், இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் சராசரியை விட அதிக குறைந்த நிலையை அடையும் வாய்ப்புள்ளது.