இந்தியா

கோமதி நதி திட்ட ஊழல் வழக்கில் சுழலும் சிபிஐ... உ.பி. தேர்தல் களத்தில் தாக்கம் தருமா?

நிவேதா ஜெகராஜா

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது கோமதி நதியில் கால்வாய்கள் அமைப்பது மற்றும் பொலிவுப்படுத்துவது போன்ற பல்வேறு திட்டங்களில் ஊழல் நடந்துள்ளதாக அளிக்கப்பட்டுள்ள புகார்களின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணைகளை விரைவுபடுத்தியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக திங்கட்கிழமையன்று மூன்று மாநிலங்களில் சிபிஐ குழுக்கள் அதிரடி சோதனைகள் நடத்தியுள்ளன. அடுத்த வருடம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வழக்கில் மீண்டும் சிபிஐ 42 இடங்களில் சோதனைகள் நடத்தியுள்ளது அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. உத்தரப் பிரதேசம் மாநிலம் தவிர மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா மற்றும் ராஜஸ்தானில் உள்ள ஆல்வர் ஆகிய இடங்களிலும் சிபிஐ சோதனைகள் நடைபெற்று உள்ளன.

அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட கோமதி நதி திட்டத்தில் நதிக்கரையை பொலிவுபடுத்துவது மற்றும் பல்வேறு கால்வாய்களை அமைப்பது என இரண்டு முக்கிய அம்சங்கள் இடம்பிடித்திருந்தன. 2015-ஆம் வருடத்திலேயே ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் ஊழல் நடந்ததாக சிபிஐ பல வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ரூப் சிங் யாதவ் மற்றும் ராஜ்குமார் யாதவ் ஆகிய அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியான ஆலோக் குமார் சிங் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கோமதி நதி திட்டங்கள் தொடர்பான வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரப் பிரதேச அரசு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

2017-ஆம் வருடத்திலேயே இத தொடர்பான முதல் வழக்கை சிபிஐ பதிவு செய்தது. ஒரு வெளிநாட்டு நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் ஊழல் செய்ததாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ரூ.1000 கோடிக்கு மேலான மதிப்பில் ஒப்பந்தங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்குகளில் அப்போதைய முதல்வரான அகிலேஷ் யாதவ் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பது அரசியல் ரீதியாக பரபரப்பாக விவாதிக்கப்படும் சர்ச்சையாக இருந்து வருகிறது. யோகி ஆதித்யநாத் அரசு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பரிந்துரை அளித்த நிலையிலும், அகிலேஷ் யாதவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லாததால் அவருக்கு எதிராக சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை என கருதப்படுகிறது.

சிபிஐ திங்கட்கிழமையன்று நடத்திய சோதனைகள் உத்தரப் பிரதேச தலைநகரான லக்னோ மற்றும் அந்த மாநிலத்தின் 39 இடங்களில் நடைபெற்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆக்ரா, மீரட், கோரக்பூர், மொராதாபாத், கௌதம் புத் நகர், காசியாபாத் மற்றும் ராய் பரேலி ஆகிய இடங்களில் சோதனை சோதனைகள் நடைபெற்றுள்ளன என தெரியவந்துள்ளது.

புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிலே சிபிஐ 189 நபர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளது. இதிலே 16 நபர்கள் அந்த சமயத்திலே அரசு அதிகாரிகளாக இருந்தவர்கள் என்றும், மேலும் 173 நபர்கள் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளாக செயல்பட்டவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய பல்வேறு ஒப்பந்தங்களை அளிப்பதில் இந்த நபர்கள் முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோமதி நதியை அழகுப்படுத்துவது மற்றும் கால்வாய்கள் அமைப்பது போன்ற நோக்கங்களுடன் அமல்படுத்தப்பட்ட திட்டங்களில் இதுவரை சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கங்களின்படி கிட்டதட்ட 1600 கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளின் விசாரணை விரைவில் முடியாது என்றும், அடுத்த வருட சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் இந்த வழக்குகள் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது உள்ளது என்றும் உத்தரப் பிரதேச அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு முக்கிய போட்டியாக சமாஜ்வாதி கட்சி இருக்கும் என கருதப்படுகிறது. காங்கிரஸ் கட்சி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு உள்ளது என்றும், அதேசமயத்தில் முன்னாள் முதல்வரான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இதர சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் உத்தரப் பிரதேசத்தின் மூத்த அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள்.

யோகி ஆதித்யநாத் அரசு கோவிட் பெருந்தொற்று உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை மேலாண்மை செய்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் தொடரும் நிலையில், அடுத்த வருட சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை யோகி ஆதித்யநாத் அரசு முன்னிலைப்படுத்தும் என்றும், அத்துடன் முந்தைய அரசுகளின் ஊழல் குறித்து வலியுறுத்தும் எனவும் உத்தரப் பிரதேச அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள்.

- கணபதி சுப்பிரமணியம்