இந்தியா

“பட்டியலினத் தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்?” - உத்தவ் தாக்கரே

webteam

கோர்கான் பீமா சம்பவம் தொடர்பான பட்டியலினத் தலைவர்கள் மீதான வழக்குகள் அனைத்து வாபஸ் பெறப்படும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளார்.

பீமா கோரேகாவ் போரின் 200வது ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி ஷனிவார் வாடா பகுதியில் கடந்த 2017 ஆண்டு டிசம்பர் 31ம் தேதி எல்கர் பரிஷத் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சமூக செயற்பாட்டளர்கள், பட்டியலின செயற்பாட்டளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, ஜனவரி ஒன்றாம் தேதி நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக புனே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அதேபோல், எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில், வன்முறையை தூண்டும் வகையில் பேசப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளில் சோதனைகள் நடைபெற்று பலரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்குகள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பீமா கோரேகாவ் சம்பவம் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் தலைவர்களிடம் உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். அப்போது, கடந்த ஆண்டு ஜனவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பட்டியலின தலைவர்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர்.