இந்தியா

மக்களவைத் தேர்தலில் நாடெங்கிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் - சிவசேனா அதிரடி அறிவிப்பு

ஜா. ஜாக்சன் சிங்

அடுத்த மக்களவைத் தேர்தலில் நாடெங்கிலும் வேட்பாளர்களை களமிறக்க உள்ளதாக மகாராஷ்டிராவில் ஆளுங்கட்சியாக உள்ள சிவசேனா தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸின் வரிசையில் சிவசேனாவும் தேசிய அரசியலில் தீவிரம் காட்ட முனைந்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் சிவசேனா கட்சி நாடெங்கும் வேட்பாளர்களை களமிறக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே தலைமையில் சிவசேனா நாடெங்கும் கால் பதிக்கும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் சஞ்சய் ரவுத் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாகவே சில மாநில கட்சிகள் தேசிய அரசியலில் விருப்பம் காட்டத் தொடங்கியுள்ளன. மம்தா பான்ரஜியின் திரிணமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தை கடந்து மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், கோவாவிலும் தனது கட்சியை வலுப்படுத்தி வருகிறது. இதில் மேகாலயாவில் அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. அதேபோல, ஆம்ஆத்மி கட்சி டெல்லியை தொடர்ந்து பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் தனது கிளைகளை பரப்பி வருகிறது.

அந்த வரிசையில், தற்போது சிவசேனாவும் தேசிய அரசியலில் கால்பதிக்க முனைவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.