கொரோனா.. இன்று ஒட்டுமொத்த உலகையும் தனது கைபொம்மையாக்கி விளையாடி கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகள் தொடங்கி, சிறிய நகரம் வரை தனது கோரத்தாண்டவத்தை ஈவு இரக்கமில்லாமல் சகட்டு மேனிக்கு நிகழ்த்தி வருகிறது. இந்தியாவை பொருத்தவரை இன்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,718 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 67 நபர்கள் இறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதில் ஆறுதல் தரக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால் ஒட்டுமொத்த இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து தற்போது வரை 8325 நபர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு மருத்துவர்கள், சுகாதார துறையினர் பல வழிமுறைகளையும், நம்பிக்கைகளை விதைத்தாலும் மக்களின் சந்தேகங்கள் என்னவோ நீண்டு கொண்டுதான் செல்கிறது. குறிப்பாக கொரோனாவில் இருந்து குணமாகி மீண்டவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனைகளை கூறி நம்பிக்கையை அளித்த போதும், அச்சத்தினால் அவர்கள் மனதில் எழும் கேள்விகள் ஏராளம்.
உண்மையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மனநிலை, உடல் நிலை எப்படி இருக்கும், அவர்களுக்கு மீண்டும் கொரோனா வர வாய்ப்பு இருக்கிறதா, அவர்களிடம் சாதரண பொதுமக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ஆகிய கேள்விகளோடு மருத்துவர் ராகவன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம். நமது கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் உடல் நிலை எப்படியிருக்கும்?
முதலில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைதல் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விட்டார் என்பது அவரின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிவிட்டது என்பதையும், அவருக்கு கொரோனா தொடர்பான எந்த அறிகுறிகளும் இல்லை என்பதை குறிக்கும். அவரின் உடல் நிலையில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி என்பது, தொற்றால் பாதிக்கப்படாத நபர்களை விட அதிகமாக இருக்கும்.
அவர்களுக்கு மருத்துவர்கள் சார்பில் இருந்து எந்த வித மாதிரியான உணவுகள் பரிந்துரை செய்யப்படுகின்றன?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உணவுகளை பரிந்துரை செய்கிறார்கள். எ.கா ( கபசுர குடிநீர், மஞ்சள், நிலவேம்பு கஷாயம் உள்ளிடவை)
கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களை கண்டு மக்கள் அச்சப்படுகிறார்களே? இதனால் அவர்கள் சமூகத்தில் இருந்து அன்னியப்படும் சூழ்நிலை நிலவுகிறதே?
உண்மைதான். ஆனால் மக்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர், அதிலிருந்து மீண்டுவிட்டார் அப்படியென்றால் கொரோனாவை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தி அவரின் உடலில் வந்து விட்டது. ஆகவே அவர் எதிர்ப்பாற்றல் மற்றவரை விட அதிகமாக இருக்கும். அதனால் அவர் கொரோனா நோயாளிகளுக்கு கூட சரியான பாதுகாப்பு உபகரணங்களுடன் உதவலாம். ஆகவே அவர்களை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ள அறிவுரைகளின் படி அவரை அணுக வேண்டும்.
குறிப்பாக கொரோனாவில் இருந்து மீண்டவரின் மனநிலையானது இரண்டு மூன்று நாளைக்கு பதட்ட நிலையில் இருக்கும். ஆனால் அதுவும் ஒரு வாரத்தில் சரியாகி விடும்.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
இது குறித்த சரியான தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் கிட்டத்தட்ட 2 முதல் 3 மாதங்களுக்கு எளிதாக நெருங்குவதற்கான வாய்ப்பு குறைவு.
கொரோனாவில் இருந்து மீண்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறவர்களுக்கு ஏதேனும் பிரத்யேக அறிவுரை இருக்கிறதா?
இல்லை. பிரத்யேகமாக எதுவும் இல்லை. ஆனால் சமூக விலகல் உள்ளிட்ட அறிவுரைகளின் படி அவரை அணுகலாம். அதில் எந்த வித பயமும் தேவையில்லை.
இதில் வயதானவர்கள், முன்னதாகவே சர்க்கரை உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி இதனை எதிர்கொள்கிறார்கள்?
அவர்களுக்கும் பிரத்யேகமாக எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய அத்துனை வழிமுறைகளும் அவர்களுக்கு பொருந்தும்.