மோடி
மோடி PT
இந்தியா

உ.பி. தேர்தல் களம் | உடையும் இஸ்லாமியர்களின் வாக்கு? சிஏஏ அரசியல் ஏற்படுத்தப்போகும் மாற்றம் என்ன?

நிரஞ்சன் குமார்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான பேச்சுகள் இன்றி பரப்புரையே இல்லை எனலாம்.. அந்த அளவுக்கு ஆளும் கட்சி எதிர்கட்சிகளின் பரப்புரை மேடைகளில் குடியுரிமை திருத்தச் சட்டம் எதிரொலிக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் இவ்வளவு உக்கிரமாக உத்தரப் பிரதேசத்தில் இருப்பதற்கு காரணம், இந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சுமார் 24 இடங்களில் சுமார் 20 முதல் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இஸ்லாமியர்கள் இருக்கின்றனர்.

இந்த தொகுதிகளில் இவர்கள்தான் வெற்றியை தீர்மானிக்க கூடியவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக ராம்பூர், சாகரன்பூர், சம்பல் உள்ளிட்ட தொகுதிகளில் இஸ்லாமியர்கள் பாஜகவிற்கு வாக்களித்ததால்தான் கடந்த 2014ஆம் ஆண்டு இந்த தொகுதிகளை கைப்பற்ற முடிந்தது. அதுவே 2019ஆம் ஆண்டு இந்த தொகுதிகள் அனைத்தும் பாஜகவின் கைகளில் இருந்து நழுவியது.

அதனால்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த முறை உத்தரப்பிரதேசத்தில் பாஜகவிற்கு பாதகமாக அமையும் என சொல்லப்படுகின்றது.

குடியுரிமை திருத்த சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது நாட்டிலேயே முதல் முதலாக எதிர்ப்புக் குரல் கிளம்பியது உத்தரப்பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில்தான். அதுவும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள்தான் முதன் முதலாக போராட்டத்தில் குதித்தனர்.

I.N.D.I.A. கூட்டணியின் வாக்குகள் அதிக அளவில் சிறுபான்மையினர் மற்றும் ஓபிசி பிரிவினரையே சார்ந்து இருக்கிறது. அதே நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி இதுவரை அறிவித்துள்ள 62 வேட்பாளர்களில் 18 இஸ்லாமிய வேட்பாளர்களும் 14 ஓபிசி வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதனால் பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. எனினும் சிஏஏ உள்ளிட்ட
விவகாரங்களால் இந்த முறை இஸ்லாமியர்களின் வாக்குகள் பாஜகவிற்கு செல்லாது என கூறுகிறார் ஓய்வுபெற்ற பேராசிரியரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான மதிஹுர் ரகுமான்.

சிஏஏ விவகாரத்தில் உத்தரப்பிரதேசத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்க்கட்சிகள் பொய் பரப்புரை செய்வதாகவும் ஆனால் அது எடுபடாது எனவும் உறுதியாக கூறுகிறார் உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய மதுரா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பாஜகவை சேர்ந்த ஸ்ரீகாந்த் சர்மா. 

CAA issue

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான பரப்புரைகள் யாருக்கு சாதகமாகவும் யாருக்கு பாதகமாகவும் முடியப் போகிறது என்பதுதான் சுவாரசியமான முடிவு. பார்ப்போம்...!