இந்தியா

சபரிமலை வழக்கு: நீதிபதிகள் சொன்னது என்ன ?

jagadeesh

சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மசூதிகளில் பெண்களை அனுமதிப்பது உள்ளிட்ட மதரீதியான விவகாரங்களை 7 நீதிபதிகள் கொண்‌ட அமர்வு மறுசீராய்வு செய்யும் எ‌ன உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள‌து.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களை அனுமதித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக 56 சீராய்வு மனுக்கள் உட்பட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த அமர்வில் ‌‌நீதிபதிகள் கன்வில்கர், ரோஹிண்டன் நரிமன், சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இரண்டு வெவ்வேறான தீர்ப்புகள் என முதலில் தெரிவித்தார். நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்கோத்ரா மற்றும் தானும் ஒரே தீர்ப்பு வழங்குகிறோம் என கூறிவிட்டு தீர்ப்பின் அம்சங்களை வாசித்தார். மதச்சடங்குகள் எப்போதும் பொது ஒழுங்கிற்கு எதிரானதாக இருக்கக் கூடாது, தனிநபரின் வழிபடும் உரிமை என்பது ஒரு மத பிரிவினரின் சடங்குகள் மீது செல்வாக்கு செலுத்தும் வகையில் இருக்கக் கூடாது எனக் கூறினார். சில மதத்தினர் கடைபிடிக்கும் மத நம்பிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக, மசூதிக்குள் பெண்களை அனுமதிப்பது, பா‌ர்சி பெண்கள் வழிபாட்டு தலங்களுக்குள் தங்களை அனுமதிக்க வேண்டுவது, தாவூதி போரா இன பெண்களின் கோரிக்கை என அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி‌, இந்த வழக்குகளை இணைத்து 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்வதாக அறிவித்தார். மேலும், மதவழிப்பாட்டுத் தலங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் பொதுவான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பின்னர் நீதிபதி ரோஹின்டன் நரிமன், நீதிபதி சந்திரசூடும் ஒரே தீர்ப்பை வழங்குவதாக கூறி, நாங்கள் பெரும்பான்மை தீர்ப்புக்கு உட்படவில்லை என ந‌ரிமன் குறிப்பிட்டார். பெண்கள் மனதளவில் பாகுபாடிற்கு உள்ளாகின்றனர் என்றே அனைத்து பெண்களையும் அனுமதித்து தீர்ப்பு வழங்கினோம் என்ற‌னர். எனவே, இதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பெண்களைத் தடுப்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என நீதிபதிகள் ரோஹின்டன் நரிமன், சந்திரசூட் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

பெரும்பான்மையான தீர்ப்பை கருத்தில் கொண்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்பட 3 நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி, 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றியதே இறுதியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஏற்கெனவே கடந்த ஆண்டு செப்டம்பரில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை எ‌ன்பதுடன் அந்த தீர்ப்புக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. இதனால், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு நீடிக்கிறது.