பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இந்தியாவில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 492 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது
உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 19 ஆம் தேதி கொரோனா தொடர்பாக நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பாதிப்பை ஒவ்வொரு இந்தியரும் விழிப்புடன் கையாள வேண்டும் என்றும் இந்த வைரஸ் பாதிப்பை யாரும் மெத்தனமாக கருதக் கூடாது என்றும் கூறியிருந்தார்.
இது மட்டுமல்லாமல் ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்படி ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மேலும் மாலை 5 மணிக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கைதட்டினர்.
நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் சில இடங்களில் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் கூட்டம் கூட்டமாக சென்ற வண்ணம் இருந்தனர். இது தனக்கு கவலை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி மக்களிடம் வீடியோ வழியாக பேச இருக்கிறார்.