செய்தியாளர் - கார்த்திகேயன்
மத்திய கிழக்கில் இருந்து வரும் போர் பதற்றம் காரணமாக, தங்கத்தின் விலை எத்தகைய உயர்வை காணும் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. எந்த அளவுக்கு இந்த விலை உயர்வு இருக்கும்? தங்கத்தின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
சர்வதேச நிதிச் சந்தைகளான லண்டன் மற்றும் நியூயார்க்கில் அமெரிக்க டாலரில் வர்த்தகமாகும் தங்கத்தின் விலையே இதன் தொடக்கப் புள்ளியாகும். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் போது, இந்தியாவில் தங்க இறக்குமதிச் செலவு அதிகரித்து அதன் விலை உயர்கிறது. வெளிநாடுகளிலிருந்து தங்கத்தைக் கொண்டு வரும்போது மத்திய அரசு விதிக்கும் இறக்குமதி சுங்க வரிகள் தங்கத்தின் அசல் விலையுடன் சேர்க்கப்படுகின்றன.
இதன்காரணமாகவும் விலை அதிகமாகிறது. பண்டிகைக் காலங்களில் ஏற்படும் உள்நாட்டுத் தேவை, போக்குவரத்துச் செலவு மற்றும் நகரங்களுக்கு இடையிலான சந்தை வித்தியாசத்தைப் பொறுத்து உள்ளூர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி போன்றவையும் தங்க விலைக்கு காரணமாக உள்ளன.
மேலும், உலக அளவில் போர் பதற்றம் ஏற்படும்போது, மற்ற வணிகத்தை சரியாக செய்ய முடியாத சூழல் ஏற்படும். இதன்காரணமாக, பாதுகாப்பான முதலீடாக உள்ள தங்கத்தில், பலரும் முதலீடு செய்ய நினைப்பார்கள். இவ்வாறு முதலீடு செய்வதால், அதன் தேவை அதிகரித்து, விலை உயரும். இவ்வாறு பல்வேறு காரணிகள் சேர்ந்து தான் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த சங்கிலியில் ஏதாவது ஒன்றில் மாற்றம் நிகழ்ந்தாலே, தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து விடுகிறது.
இப்படியான சூழலில், மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் காரணமாக, இந்தியாவில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி, கச்சா எண்ணெய் விலை உயர்வு, இயற்கை எரிவாயு தட்டுப்பாடு, கடுமையான பணவீக்கம், இந்திய ரூபாயின் வீழ்ச்சி, பங்குச் சந்தை வீழ்ச்சி, அரசின் நிதிச்சுமை அதிகரிப்பு ஆகிய பிரச்சனைகளோடு சேர்த்து, தங்கத்தின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாம்.
அதாவது, போர் அச்சம் காரணமாக, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளதாம். மேலும், போர் தீவிரமாகும்பட்சத்தில், எரிசக்தி முடக்கப்படும் சூழல் உருவானால், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 1 லட்சத்து 45 ஆயிரம் வரை விற்பனையாகும் என்று சர்வதேச நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.
குறிப்பாக, தங்களுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகள் எடுத்தால், சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய பகுதிகளில் உள்ள எண்ணெய் வயல்களில் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் கூறியதை தொடர்ந்து, தங்கத்தின் விலை இவ்வாறு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.