தெருநாய்கள் பிரச்னையால் அகமதாபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கி தாருங்கள் என நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது மனைவி தெருநாய் ஒன்றை எடுத்துவந்து வீட்டில் வளர்த்துள்ளார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியபோதும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. மேலும் அவர், தெருவில் சுற்றித் திரியும் சில நாய்களையும் வீட்டுக்கு எடுத்து வந்து வளர்த்துள்ளார். அந்த தெருநாய்களுக்கு கணவரைவிட, விதவிதமான உணவுகளைச் சமைத்துப் போட்டதுடன், அவற்றை அக்கறையுடன் அபராமரித்து வந்தார்.
மேலும், இரவு நேரம் அந்த நாய்களுடனேயே படுக்கையில் தூங்கியுள்ளார். மனைவியின் இந்தச் செயல் கணவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தவிர, நாய்கள் தொல்லையால், அக்கம்பக்கத்தினரும் அந்தப் பெண் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் விலங்குகள் நலவாரியத்தில் உறுப்பினராகச் சேர்ந்த அவர், அக்கம்பக்கத்தினர் மீது குற்றம்சாட்டினார். இதனால் அந்தப் பெண்ணின் கணவரும் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.
மனைவியின் இந்தச் செயலால் அவமானப்பட்டதாக உணர்ந்த அவரது கணவர், 2007ஆம் ஆண்டு பெங்களூரூவுக்கு ஓட்டம் பிடித்தார். இருந்தபோதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும் தெருநாய்களை திருமணம் செய்து கொண்டதுபோல புகைப்படத்தைக் காட்டி, கணவரை வெறுப்பேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மேலும்மேலும் நொந்துபோன கணவர், மனைவியால் தாம் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், அதன் காரணமாக தனது ஆண்மைத்தன்மையை இழந்துவிட்டதாகவும் கூறி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருந்தார்.
2024ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த இந்த மனுமீது, உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்ததோடு, அந்த மனுவையும் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து கணவர் அகமதாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தனது மனுவில், மனைவிக்கு ரூ.15 லட்சம் ஜீவனாம்சம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது மனைவியோ தனக்கு ரூ. 2 கோடி வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு அடுத்த மாதம் 1ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.