ayodhya
ayodhya pt web
இந்தியா

தேனிலவுக்கு ’கோவா’ போகலாம் என நம்பவைத்து ’அயோத்தி’ அழைத்து சென்ற கணவர்; விவாகரத்து கோரிய மனைவி!

Angeshwar G

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள பெண் ஒருவர், திருமணமான ஐந்து மாதங்களிலேயே தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தம்பதிக்கு திருமணம் ஆகியுள்ளது. அந்த நபர் ஐடி துறையில் பணி புரிந்து வருகிறார் நல்ல வருமானம் ஈட்டி வருகிறார். அதேபோல், அந்த பெண்ணும் வேலைக்கு செல்கிறார். நல்ல சம்பளம் வாங்குகிறார். தேனிலவுக்கு வெளிநாடு செல்லலாம் என்றுதான் முதலில் திட்டமிட்டுள்ளனர். இருவரும் நல்ல சம்பளம் வாங்குவதால் தேனிலவுக்கு வெளிநாடு செல்வது அவர்களுக்கு பெரிய சிக்கல் இல்லை.

அயோத்தி ராமர் கோவில்

தேனிலவுக்கான திட்டம் குறித்து அப்பெண் கூறுகையில், “என் கணவர் தனது பெற்றோரை கவனிக்க வேண்டும் என்ற காரணத்தால் தேனிலவுக்கு வெளிநாடு செல்வதற்கான யோசனையை நிராகரித்தார். உள்நாட்டிலேயே தேனிலவிற்கு செல்லலாம் என்று கூறினார்” என்றார். இதனை அடுத்து கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கு செல்லலாம் என தம்பதி இறுதியாக முடிவு செய்துள்ளனர்.

ஆனால், அவரது தாயார், ராமர் கோவில் பிரான பிரதிஷ்டை நிகழ்வை முன்னிட்டு அயோத்தி செல்ல வேண்டும் என விரும்பியதால், அவரது கணவர் அயோத்தி மற்றும் வாரணாசிக்கு செல்வதற்காக விமான டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளார். ஆனால், இதனை தனது மனைவியிடம் அவர் தெரிவிக்கவே இல்லை. பயணம் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக தான் அப்பெண்ணிடம் கணவர் தகவல் தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்பாக அங்கு சென்று பார்க்க வேண்டும் என தனது தாயார் கேட்டுக் கொண்டதால் அவரது விருப்பத்திற்கு ஏற்ப பயணத்தை திட்டமிட்டுள்ளதாக கணவர் விளக்கம் அளித்துள்ளார்.

நம்ம வைத்து ஏமாற்றிவிட்டதாக அதிர்ச்சி அடைந்த பெண் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அயோத்தி செல்லவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து, ஒருவழியாக அவர்கள் அயோத்தி மற்றும் வாரணாசிக்கு பயணம் சென்றும் வந்துள்ளனர். பயணம் சென்று திரும்பி சுமார் 10 நாட்களுக்குப் பிறகு ஜனவரி 19 ஆம் தேதி அப்பெண்மணி விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தனது கணவர், தனது திருமணத்தின் முன்பிருந்தே, தன்னைவிட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். தம்பதிக்கு தற்போது போபால் குடும்ப நீதிமன்றம் ஆலோசனை பெற நேரம் கொடுத்துள்ளது.

இரு வெவ்வேறு வாழ்க்கை சூழலில் வாழ்ந்து வந்த இருவர் கணவன் மனைவி ஆக ஒரே வாழ்க்கையில் பயணிக்க தொடங்கும் காலத்தில் இருவரும் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. கணவன் ஆக இருப்பவர்கள் தன்னுடைய குடும்பத்தாரின் முன்னுரிமையையும் மனைவியின் மனதையும் புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது. அதேபோல், மனைவியாக உள்ளவர்கள் தனக்கான முன்னுரியை விட்டுக் கொடுக்காமல் கணவரின் மனைவியை புரிந்து கொண்டு நடக்க வேண்டியுள்ளது. ஒரு குடும்ப உறவை சுமூகமாக எடுத்துச் செல்ல இருவரது ஒத்துழைப்பும் முக்கியமானது. தான் எந்த இடத்தில் தன்னுடய இணையரின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தவறவிடுகிறோம் என இருவரும் நிதர்சனமாக யோசித்து வாழ்க்கையை கொண்டு சென்றாலே பிரச்னைகள் வந்தாலும் அது இப்படி விவாகரத்து வரை செல்லாது.