மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத், எல்.பி நகர், ராக் டவுன் காலனியில் வசித்து வருபவர் ருஷிகுமார். இவர் தனது மனைவி ஹாரிகாவுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டாண்டுகள் கடந்த நிலையில் மனைவி ஹாரிகா முதலாமாண்டு பல் அறுவை சிகிச்சை படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், ஹாரிகாவின் தாயாரை போனில் அழைத்த ருஷிகுமார், ’தங்களது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், ஹாரிகா தற்கொலை செய்து கொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக ருஷிகுமாரை கைது செய்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ருஷிகுமாரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்ததால் ஹாரிகா எம்.பி.பி.எஸ் படிக்க முடியாமல் போனது. ஆனாலும், அவர் பல் அறுவை சிகிச்சை படிப்பை தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இருப்பினும் பிடிஎஸ் படிப்பில் திருப்தியடையாததால் ஹாரிகாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஹாரிகாவின் குடும்பத்தினர் கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஹாரிகாவுக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கவில்லை. இதனால், மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து விவாகரத்து கேட்டு மிரட்டினர். இந்நிலையில் இந்த ஆண்டு பிடிஎஸ் படிப்பில் சேர்த்து விட்டோம். அதிலும் திருப்தியடையாத ருஷிகுமார் குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு மிரட்டினர், இந்நிலையில் எங்கள் வீட்டுப்பெண்ணை திட்டமிட்டு தீவைத்து கொளுத்தி கொலைசெய்து இருக்கின்றனர்’என குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.