இந்தியா

புடிச்சுட்டு போங்க சார்: கணவனை காட்டிக்கொடுத்த மனைவி!

webteam

போலீசுடன் கூட்டணி அமைத்து, கொள்ளைக்கார கணவனை பிடித்துக்கொடுத்த மனைவியை போலீசார் பாராட்டியுள்ளனர்.

மும்பை அருகே மால்வானி பகுதியை சேர்ந்தவர் ஷாமி நயீன் அன்சாரி (24). இரவுகளில் கதவுகளை உடைத்து திருடுவது, கொள்ளையடிப்பது மட்டுமே அன்சாரியின் அன்றாட அலுவல். இவர் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. ஆனால், போலீசின் பிடியின் சிக்காமல் தப்பித்துக்கொண்டே இருந்தார். இதற்கிடையே அந்தப் பகுதி போலீசார், தினமும் நள்ளிரவில் அவரது வீட்டுக் கதவை தட்டி,’அன்சாரியை எங்கே?’ என்று கேட்டுள்ளனர். இதனால் கடுப்பான மனைவி, ’அவர் வந்தா நானே சொல்றேங்க. தினமும் இப்படி தூக்கத்தைக் கெடுக்காதீங்க’ என்று கூறினார்.

இந்நிலையில் ஸ்மாட்போன்கள் காணாமல் போனது தொடர்பாக அன்சாரி மீது புகார் கூறப்பட்டது. நள்ளிரவில் கதவைத் தட்டினர் போலீசார். கடுப்பான மனைவி, ‘அதான்  சொன்னேனே... ஏன் தொந்தரவு பண்றீங்க?’ என்றார். இதற்கு என்னதான் வழி என்று யோசித்த மனைவி, போலீசாரிடம், ’காலையில பத்து மணிக்கு என்னைப் பார்க்க மலாடுக்கு வரச் சொல்றேன். அங்க வச்சு அவரை பிடிச்சுக்கோங்க’ என்று தாராள மனதுடன் சொல்ல, போலீசார் ஓகே என்றனர். அதை போலவே செய்ய, போலீசார் மலாடில் மறைந்து நின்று, அன்சாரி அலேக்காக அள்ளினர்.
குற்றவாளியை பிடிக்க மனைவியே உதவியதால் போலீசார் அவரை பாராட்டியுள்ளனர்.