மகாராஷ்டிராவை சேர்ந்த மறைந்த ராணுவ மேஜரின் மனைவியும், ராணுவப் பணியில் சேரவுள்ளார். ராணுவப் பணியினை தனது கணவருக்கு செய்யும் மரியாதையாக நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் விரார் பகுதியை சேர்ந்த ராணுவ மேஜர் பிரசாத் மஹாதிக். கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தோ- திபெத் பகுதியில் ராணுவ பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் மரணம் அடைந்தார்.
பிரசாத் மரணமடைந்த நிலையில் தற்போது அவரின் மனைவியான கௌரி ராணுவ பணியில் சேரவுள்ளார். பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்தால் அவர்களின் மனைவிகளுக்காக நடத்தப்படும் எஸ்எஸ்பி தேர்வில் கௌரி கடந்த 2018-ஆம் ஆண்டு பங்கேற்றுள்ளார். இத்தேர்தவில் கௌரி முதல் ஆளாக தேர்வான நிலையில் அடுத்தகட்ட பயிற்சிக்கு தேர்ச்சி பெற்றார்.
இதனையடுத்து வரும் ஏப்ரல் மாதம் முதல் 49 வார பயிற்சிக்கு செல்லும் கௌரி அதன்பின் 2020 மார்ச் மாதம் முதல் ராணுவ பணியில் சேரவுள்ளார். ராணுவத்தில் லெப்டினென்ட் அதிகாரியாக அவர் பணி நியமனம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கௌரி கூறும்போது தனது ராணுவ பணியினை தனது கணவருக்கு செய்யும் மரியாதையாக நினைப்பதாக தெரிவித்தார்.