இந்தியா

ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் ஏன் இவ்வளவு போலீஸ் ? உயர்நீதிமன்றம் கண்டனம்

ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் ஏன் இவ்வளவு போலீஸ் ? உயர்நீதிமன்றம் கண்டனம்

webteam

உச்சநீதிமன்றம் உத்தரவு என்ற பெயரில் சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் எதற்கு இவ்வளவு போலீஸ் என்று கேரள மாநில உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், நீதிமன்றம் உத்தரவு என்ற பெயரில் உண்மையான பக்தர்களிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்துக்கொள்ளலாமா என்ற கேள்வியையும் அம்மாநில உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை கடந்த 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மண்டலப்
பூஜைக்காக திறக்கப்பட்டது. மண்டலப் பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை டிசம்பர் மாதம் 27 ஆம்
தேதி  சாத்தப்பட்டு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக ஏராளமான பிரச்சனைகளை சபரிமலை கோயில் இப்போது சந்தித்து வருகிறது.

இதற்கிடையே சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட
மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அவற்றின் மீது ஜனவரி 22ஆம் தேதி விசாரணை நடைபெறும் என
உச்சநீதிமன்றம்  கூறியது. மேலும் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்துவிட்டது. இந்நிலையில்
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கால அவகாசம் அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தை
திருவாங்கூர் தேவஸம் போர்டு நேற்று மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சன்னிதானத்தில் பக்தி பாடல்களை ஐயப்ப பக்தர்கள் 70 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், பக்தர்களை கோவிலில் தங்க விடாமல் விரட்டி அனுப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் கேரள அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினர். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞரிடம் பேசிய நீதிபதி "சபரிமலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு என்ற பெயரில் இதுபோன்று போலீஸ் எப்படி தடியடி போன்ற மோசமான நடவடிக்கையில் ஈடுபட முடியும் ? 

மேலும் தொடர்ந்த நீதிபதி " சபரிமலை கோவிலில் 15 ஆயிரம் போலீஸாரை குவிக்க வேண்டிய அவசியம் என்ன ? கோவிலின் சன்னிதானம் பக்தர்களுக்கானது. அங்கு ஏன் இவ்வளவு அத்துமீறல். பிற்பகல் மேல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்கிவிட்டுதான் மறுநாள் காலை நெய் அபிஷேகம் செய்ய முடியும். நெய் அபிஷேகம் செய்யவிடாமல் பக்தர்களை போலீஸார் விரட்டியடித்தது ஏன் ?" என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனங்களையும் தெரிவித்துள்ளது.