தன்னாட்சி அதிகாரம் மிக்க சிபிஐ இயக்குனரை நியமிக்க பிரதமர் மோடி அரசு அஞ்சுவதாக மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார்.
சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கடந்த 10ம் தேதி நியமனக் குழுவால் நீக்கப்பட்டார். பின்னர் நாகேஸ்வர் ராவ் இடைக்கால சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார். நாகேஸ்வர ராவின் நியமனம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சனம் செய்துள்ளார்.
நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என்று மல்லிகார்ஜுன் கார்கே குறிப்பிட்டுள்ளார். மேலும் சிபிஐக்கு புதிய இயக்குநரை தேர்வு செய்ய உடனடியாக நியமனக் குழுவை கூட்ட வேண்டும் என அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும். சிபிஐ அமைப்பு சுயேச்சையான இயக்குநரின் கீழ் செயல்படுவதை மத்திய அரசு விரும்பவில்லை என்பதையே இடைக்கால இயக்குனர் நியமனம் காட்டுவதாகவும் கார்கே கூறியிருக்கிறார். மேலும் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா பதவி நீக்கத்திற்கு காரணமாக அமைந்த மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையையும் ஜனவரி 10ம் தேதி நடைபெற்ற நியமனக் குழு கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களையும் வெளியிட வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள மல்லிகார்ஜுன் கார்கே, அலோக் வர்மா மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாத போதே அவர் நீக்கப்பட்டுள்ளார்.அவரை நீக்க வேண்டுமென்ற எண்ணத்திலே பிரதமர் மோடி அரசு செயல்பட்டுள்ளது. ஆனால் யாரை நியமிக்க வேண்டுமென்ற தகவலை அவர்கள் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் தன்னாட்சி அதிகாரம் மிக்க ஒரு சிபிஐ இயக்குனரை நியமிக்க பிரதமர் மோடி அரசு அஞ்சுவதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.