இந்தியா

“தாஜ்மஹாலை மூடி விடுவோம்” - உச்சநீதிமன்றம் ஏன் கூறியது?

“தாஜ்மஹாலை மூடி விடுவோம்” - உச்சநீதிமன்றம் ஏன் கூறியது?

webteam

தாஜ்மஹாலை மூடி விடுவோம் அல்லது இடித்துத் தள்ள உத்தரவிட்டு விடுவோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர். 

உலக அளவில் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகவும், உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் திகழ்வது தாஜ்மஹால். இதன் மூலம் இந்திய  அரசாங்கத்திற்கு ஏராளமான சுற்றுலா வருவாய் வந்துகொண்டிருக்கிறது. இத்தகைய பெருமைகளை கொண்ட தாஜ்மஹால் கடந்த பல ஆண்டுகளாக ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. ஆக்ராவில் பெருகி வரும் மக்கள் தொகை, தொழிற்சாலை எண்ணிக்கை ஆகியவற்றால் மாசுபாடு அதிகரித்துள்ளது. அத்துடன் தாஜ்மஹாலின் பின்புறம் ஓடும் யமுனா நதியும் கடுமையான மாசுபாடு அடைந்துள்ளது. யமுனா நதி ஒரு காலத்தில் தண்ணீர் வளமும், மீன்கள் வளமும் கொண்ட நதியாக திகழ்ந்தது. ஆனால் இன்று உலகின் மாசுபட்ட நதிகளுள் ஒன்றாக உள்ளது. வெண்மை நிற தாஜ்மஹாலும், தற்போது மாசுபாட்டால் இள மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.

ஆக்ராவும் உலகின் மாசுபட்ட நகரங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இந்த மாசுபாடு இன்றோ, நேற்றோ ஏற்பட்டது அல்ல. கடந்த 25 ஆண்டுகளாக உள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம்.சி. மேதா 1984 ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் இந்தியாவின் மிக பிரபலமான நினைவுச் சின்னங்களுள் ஒன்றான தாஜ்மஹாலை மாசுக்கட்டுப்பாட்டிலிருந்து காக்க வேண்டும் எனக்கோரியிருந்தார். 12 வருடங்களுக்குப் பிறகு 1996ல் தஜ்மாஹலை சுற்றியுள்ள மாசு பரப்பும் தொழிற்சாலைகளை அகற்றவும், யமுனா நதியை சுத்திரிகரிக்கவும் மத்திய, மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதன்பின்னரும் பல வருடங்களாக தாஜ்மஹால் சுற்றுப்புற பகுதி தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் மதன் பி லோகூர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், உலகில் உள்ள மற்ற அதிசயங்களை பிற நாட்டினர் பராமரித்து வருகின்றனர். ஆனால் தாஜ்மஹாலை மத்திய, மாநில அரசுகள் அதுபோல் பராமரிக்கின்றதா என்பது கேள்விதான். தாஜ்மஹால் சேதமடைந்தால், அது உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளுக்கும் தான் பாதிப்பு. தாஜ்மஹாலை பராமரிக்க இதுவரை இருந்த மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாஜ்மஹாலை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதை உச்சநீதிமன்ற மூடிவிடும் அல்லது இடித்துத்தள்ள உத்தரவிடப்படும் என்று கூறினர்.