Silver  web
இந்தியா

இந்தியாவில் உயரும் வெள்ளி விலை.. ஏன் தெரியுமா?

இந்தியாவின் குறைந்த உள்நாட்டு இருப்பு, அதிகரிக்கும் தேவை மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் சேர்ந்து வெள்ளி விலையை அதிகரிக்க செய்துள்ளது.

PT WEB

நகை தயாரிப்பு முதல் தொழில்துறை பயன்பாடு வரை வெள்ளி முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகளவில் வெள்ளி அதிகமாக வைத்திருக்கும் நாடுகளில் இந்தியா 10ஆவது இடத்தில் உள்ளது. சுமார் 8,000 மெட்ரிக் டன் அளவுக்கு வெள்ளி இருப்பு இந்தியாவிடம் இருக்கிறது.

silver

உலகிலேயே அதிகமாக வெள்ளியைப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக நகை தயாரிப்பு, மத சம்பந்தப்பட்ட பயன்பாடுகள், மின்னணு உற்பத்தி, சோலார் சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளில் வெள்ளிக்கான தேவை அதிகமாக உள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 6,000 முதல் 7,000 டன் வரை வெள்ளி தேவைப்படுகிறது. ஆனால் உள்நாட்டு இருப்பு குறைவாக இருப்பதால், தேவையின் பெரும்பகுதியை பிரிட்டன், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெள்ளியை இறக்குமதி செய்து வருகிறது. இந்தச் சூழலில் இந்திய அரசு வெள்ளி இறக்குமதியில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருப்பதால் இதன் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

silver

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் சமீபத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி வெள்ளியின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மேலும், வெள்ளிப் பாளங்கள் மற்றும் பாதி பதப்படுத்தப்பட்ட வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வெள்ளிப் பொருட்கள், கட்டுப்படுத்தப்பட்ட இறக்குமதி பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட சில வெள்ளிப் பொருட்கள் இனி கட்டுப்படுத்தப்பட்ட பிரிவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

வெள்ளி

மேலும் சர்வதேச சந்தையில் வெள்ளிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மின்சார வாகனங்கள், சூரிய ஆற்றல் சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் வெள்ளி பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் வரும் காலங்களில் வெள்ளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் இறக்குமதி கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தால் உள்ளூர் சந்தையிலும் விலை மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.