கடந்த சில மாதங்களாகவே, இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்து அத்தனை முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து வருகிறார் நிதிஷ்குமார். இதற்கு ஒரே காரணம்தான். அசுரபலத்துடன் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற ஒற்றை நோக்குடன் செயல்பட்டு வருகிறார்.
காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், பாரத் ராஷ்ட்ரீய சமிதி, இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து முக்கியக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் நிதிஷ்குமார். பாரதிய ஜனதா ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கு பிஜு ஜனதா தளத்தின் தலைவரையுமே அவர் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இத்தனை எதிர்க்கட்சிகள் இருந்தும், அவற்றில் ஜாம்பவான்களாக தலைவர்கள் இருந்தும், பிரதமர் வேட்பாளர்களில் நிதிஷ்குமார் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். மத்திய அரசில், ரயில்வே துறை உள்ளிட்ட பல முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்துள்ள நிதிஷ்குமார், பீகார் மாநிலத்தில் அதிகம் முறை முதல்வர் பதவியை வகித்தவர் என்ற பெருமையையும் பெற்றவர்.
தனது முழு கவனத்தையும் தேசிய அரசியலின் பக்கம் திருப்பியுள்ள நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வியை 2027இல் பீகார் முதல்வர் வேட்பாளர் என அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமாருக்கு அதிக வாய்ப்பு இருப்பதற்கு மற்றொரு காரணம், எதிர்க்கட்சிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள்தான்.
உதாரணமாக, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இருவருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கரம் கோர்ப்பதில் தயக்கம் உள்ளது. அவர்கள், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கும் மனநிலையில் இல்லை என்றே பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை எடுத்துக்கொண்டால், அது ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு குறைவே. திமுக தலைவரான ஸ்டாலினுக்கு, மாநில அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது.
இப்படி, திசைக்கு ஒன்றாக இருக்கும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க சரத்பவார் அல்லது நிதிஷ்குமாரால் மட்டுமே முடியும் என கருதுவோர் உண்டு. ஆனால், வயதுமூப்பு, மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் போன்றவற்றை எதிர்கொண்டிருக்கும் சரத் பவாரால் தேசிய அரசியலில் முழுமையாகக் கவனம் செலுத்தமுடியுமா என்பது கேள்விக்குறியே. இப்படி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் தலைமைப் பொறுப்பு காலியாக உள்ள நிலையில் அதை நிரப்பும் முயற்சியில் நிதிஷ்குமார் முழுமையாக ஈடுபட்டுள்ளார்.