உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குஜராத் மாநிலம் கிரிக்கெட் சங்கம் உருவாக்கியுள்ளது.
இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரடியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வந்திறங்குகிறார். நண்பகல் 11.40 மணிக்கு ட்ரம்ப் வரும் நிலையில், விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரை, லட்சக்கணக்கானோர் பங்கேற்று பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.
மனைவி மெலனியாவுடன் 12.15 மணிக்கு சபர்மதி ஆசிரமம் செல்லும் ட்ரம்ப், அங்கு மகாத்மா காந்தி தங்கியிருந்த அறை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை பார்வையிடுகிறார். இதைத்தொடர்ந்து மொடேராவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பிற்பகல் 1.05 மணி அளவில், கலந்து கொண்டு இந்த மைதானத்தை அதிபர் டிரம்ப் திறந்து வைக்கவுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மொடேராவில் 1982-ம் ஆண்டு சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டது. இந்த மைதானத்தில் இதுவரை 12 டெஸ்ட் மற்றும் 24 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. ஏற்கனவே இருந்த மொடேரா மைதானத்தை இடித்து 63 ஏக்கர் பரப்பளவில் புதிய ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானம் 1,10,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிநவீன மின்விளக்குகள், அதிக இடவசதி கொண்ட பார்க்கிங் வசதி என முற்றிலும் அதிநவீன சிறப்பம்சங்களுடன் உருவாகி உள்ளது.
இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மைதானமே உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருந்து வந்தது. இந்த மைதானத்தில் சுமார் 1,00,024 ரசிகர்கள் அமரலாம். ஆஸ்திரேலியாவின் மைதானத்தை பின்னுக்குத் தள்ளும் விதமாக அகமதாபாத் மைதானம் உருவாகி உள்ளது. இவ்வளவு பெரிய மைதானத்தை கட்டுவதற்கு வடிவமைப்பாளர்கள் எடுத்துக்கொண்ட கால அளவு வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே.
இதில் 76 கார்ப்பரேட் பெட்டிகள், நான்கு உடை மாற்றும் அறைகள், மூன்று உடற்பயிற்சி அறைகள், அதிநவீன கிளப் வசதிகள், ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம் ஆகியவை அடங்கும்.
மொடேரா கிரிக்கெட் மைதானம் முக்கிய உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமல்ல, இது சமூக பயன்பாட்டிற்கும் இருக்கும் அளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.