யோகி ஆதித்யநாத் pt web
இந்தியா

மகாகும்பமேளா: நெரிசல் குறித்த செய்திகளை வெளியிடாதது ஏன்? முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கம்..!

ஜனவரி 29 அன்று பிரயாக்ராஜில் நடந்த மகாகும்பமேளாவில் நடந்த கூட்ட நெரிசல் குறித்து உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கம் அளித்திருக்கிறார்.

அங்கேஷ்வர்

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப்.26 ஆம் தேதி நிறைவுபெற்றது. இந்தாண்டு மட்டும் 66 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பமேளாவில் கலந்து கொண்டனர்; இது மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஆனாலும், முக்கிய நீராடும் நாளான மௌனி அமாவாசை (ஜனவரி 29) அன்று திரிவேணிச் சங்கம கூட்ட நெரிசலால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மகா கும்பமேளா

இந்நிலையில், லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை மற்றும் இந்திய தபால் சேவை அதிகாரிகள் மத்தியில், ‘மகா கும்பமேளாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புதல்’ எனும் தலைப்பில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார்.

அதில், பக்தர்கள் கூட்டத்தை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்துப் பேசிய அவர், மௌனி அமாவாசை நாளன்று நடந்த சம்பவத்தையும் குறிப்பிட்டுப் பேசினார். ஜனவரி 28 மாலை 7.30 மணியளவில் மௌனி அமாவாசை தொடங்கிய நிலையில் கூட்டம் அதிகரித்ததாகவும், அதிகாலை 1 மணி முதல் 1.30 மணி வரையில் இச்சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், நிலைமையைக் கட்டுப்படுத்த தனது அரசாங்கம் விரைவாகச் செயல்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைப்பதை உறுதிசெய்ததாகவும் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “நதிகளில் தண்ணீர் ஓடுவதைப் போன்றது கூட்டம். நீரோட்டத்தைத் தடுக்க முயற்சிக்கும்போதெல்லாம், அது வெளியேறிச்செல்லும் அல்லது அருகில் பரவி சேதத்தினை ஏற்படுத்தும். இதுதான் அன்றும் நடந்தது. மிகப்பெரிய மக்கள் திரள் அந்த இடத்தில் கூடியிருந்தபோது, அதிகாலை 4 மணிக்கு அனைவரும் புனித நீராட விரும்பினர்.

பிரயாக்ராஜ் மற்றும் மகா கும்பமேளா நடந்த பகுதிகளில் எட்டு கோடி பக்தர்கள் மற்றும் துறவிகள் இருந்தனர். அண்டை மாவட்டங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கும்பமேளா நடக்கும் பகுதிகளை அடைவதற்காக அவைகள் காத்திருந்தன. எனவே, கூட்ட நெரிசல் தொடர்பான செய்திகளை அதிகமாக வெளிப்படுத்த நாங்கள் அனுமதிக்கவில்லை. ஏனெனில், இதுபோன்ற செய்திகளால் மக்களிடையே பீதியை ஏற்படுத்தக்கூடும். அது நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கக்கூடும்.

கடினமான சூழல்களில் பலர் அச்சத்தின் காரணமாக தங்களது திட்டத்தினைக் கைவிடுவார்கள். ஆனால், பொறுமை மற்றும் கட்டுப்பாடுடன் உறுதியான முடிவுகளை எடுக்க நாம் வலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கூட்ட நெரிசல் அதிகளவில் இருந்தபோதும் 13 மடாலயங்களைச் சேர்ந்த மடாதிபதிகள் குளிப்பதற்குத் தயாராக இருந்தனர். இதுபோன்ற நிகழ்வுகளில் முக்கியமான இரு சவால்கள் இருக்கின்றன. முதலில், வரலாற்று ரீதியாக சர்ச்சைகளுக்கு வழிவகுத்த மடாலயபதிகளின் குளிக்கும் வரிசைகளைத் தீர்மானித்தல்; இரண்டாவது, அதிகாலை 4 மணிக்கு சடங்கு சீராக நடந்து வருவதை உறுதி செய்தல்.. இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், நிலைமையைச் சமாளிக்க அவர்களது குளியலை ஒத்திவைக்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். சூழ்நிலைகளையும், சூழலையும் நாங்கள் சமாளித்தோம்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மீதமுள்ள சடங்கு நீராடும் நாட்களில் அரசாங்கம் மேலும் பல கடுமையான ஏற்பாடுகளைச் செய்தது.

மகாகும்பமேளா பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது. இது வேலை வாய்ப்புகளை வழங்குகிறது; பல்வேறு வணிகங்களை ஆதரிக்கிறது. முன்னர் கவனிக்கப்படாமல் இருந்த அதன் பொருளாதாரத் தாக்கம் இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.