இந்தியா

PT Web Explainer: செஸ்... இதுவரை திரட்டிய ரூ.3.59 லட்சம் கோடி எங்கே? - ஓர் எளிய பார்வை

PT Web Explainer: செஸ்... இதுவரை திரட்டிய ரூ.3.59 லட்சம் கோடி எங்கே? - ஓர் எளிய பார்வை

webteam

மத்திய பட்ஜெட்டையொட்டி பேசப்படும் பரபரப்பான விஷயங்களில் ஒன்று அக்ரி இன்ஃப்ரா செஸ் (Agri-infra Cess). பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பல பொருள்களுக்கு 'அக்ரி செஸ்' விதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதால் சில்லறை விற்பனை விலையில் மாற்றம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் ஏன் இந்த புதிய கூடுதல் வரி கொண்டுவரப்படுகிறது, 'செஸ்' என்றால் என்ன, இதுவரை செஸ் மூலம் திரட்டப்பட்ட தொகை என்ன ஆனது? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.

பொதுவாக, குறிப்பிட்ட ஓர் இலக்குகாக இந்தக் கூடுதல் வரி விதிக்கப்படும். கல்வி வரி, ஸ்வச் பாரத் வரி, கட்டுமான வரி என பலவகையான கூடுதல் வரிகள் விதிகப்படும். இவை அந்தக் குறிப்பிட்ட செயல்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். அந்த வகையில், இப்போது நடைமுறைப்படுத்தப்படும் அக்ரி-இன்ஃப்ரா செஸ் மூலம் வேளாண் துறையின் கட்டமைப்புக்கானது. உதாரணமாக, விளைபொருள்களை இருப்பு வைக்கக் கூடிய குடோன்கள் முதலியவற்றை உருவாக்குதைச் சொல்லலாம்.

'செஸ்' என்பது கூடுதல் புதிய வரி என கருதவேண்டாம். அடிப்படை வரிகள் மீது கூடுதலாக இந்த வரிகள் விதிக்கப்படும். உதாரணத்துக்கு, ஒரு பொருள் 100 ரூபாய் என வைத்துக்கொள்வோம். இதில் 18 சதவீத ஜிஎஸ்டி என்றால், 18 ரூபாய் வரி செலுத்த வேண்டும். இந்த வரித்தொகையின் மீதுதான் 'செஸ்' விதிக்கப்படும். தற்போதைய அக்ரி இன்ஃப்ரா செஸ் கூட இப்படியானதொரு கூடுதல் வரிதான்.

மாநிலங்களுக்கு இழப்பு:

பெட்ரோல், டீசல் மீதான சில்லறை விற்பனை வரியில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. இருந்தாலும், ஏற்கெனவே இருக்கும் உற்பத்தி வரியைக் குறைத்து, இந்த செஸ் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், மாநிலங்களின் வருமானம் பாதிக்கப்படும். உற்பத்தி வரியில் மாநிலங்களுக்குப் பங்கு இருக்கிறது. ஆனால், செஸ் என்பது குறிப்பிட்ட தேவையாக உருவாக்கப்பட்டிருப்பதால், அந்த தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், மாநிலங்களுக்கு வருமானம் இழப்பு ஏற்படும்.

'அக்ரி இன்ஃப்ரா செஸ்' மூலம் சுமார் ரூ.30,000 கோடி வசூலாகும் (2021-22-ம் நிதி ஆண்டில்) என்று மத்திய வருவாய் செயலாளர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்திருக்கிறார். அதாவது, மாநிலங்கள் மொத்தமாக ரூ.30,000 கோடி அளவுக்கு வருமானத்தை இழக்க வேண்டி இருக்கும்.

இதனால், மாநில அரசுகள் இந்த அக்ரி இன்ஃப்ரா செஸ்ஸை கடுமையாக எதிர்க்கின்றன. ஒடிஷா முதல்வர், மேற்கு வங்க நிதியமைச்சர் ஆகியோர் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள்.

மேற்கு வங்கி நிதியமைச்சர் அமித் மித்ரா கூறும்போது, "பா.ஜ.க அரசு 2014-ம் ஆண்டு பொறுப்பேற்கும்போது மொத்த வருமானத்தில் 'செஸ்' பங்கு 2.50 சதவீதமாக இருந்தது. ஆனால், படிப்படியாக 'செஸ்' உயர்த்தப்பட்டு 16 சதவீதமாக இருக்கிறது. இதனால் மாநிங்களின் வருமானம் பெருமளவு பாதிக்கப்படுகிறது என கூறியிருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் 'செஸ்' குறித்து தனது அதிருப்தியை பதிவு செய்திருக்கிறார்.

ரூ.3.59 லட்சம் கோடி!

இதுவரை பல பெயர்களில் 'செஸ்' வசூலிக்கப்பட்டு வருகிறது. இவை சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், அவ்வாறு 'செஸ்' மூலம் திரட்டப்பட்ட தொகையில் பெருமளவு பயன்படுத்தப்படாமலேயே இருப்பது கண்கூடு. அந்த வகையில், 2015 முதல் 2020-ம் நிதியாண்டு வரையிலாக காலத்தில் ரூ.3.59 லட்சம் கோடி அளவு தொகை பயன்படுத்தப்படாமலே இருக்கிறது.

இந்த தொகையை இதர திட்டங்களுக்கும் பயன்படுத்த முடியாது என்பதுதான் முக்கியமான விஷயம். ஏனெனில், எந்த நோக்கங்களுக்காக 'செஸ்' திரட்டப்பட்டதோ, அந்தந்த திட்டங்களுக்காக மட்டுமே தொகையைப் பயன்படுத்த முடியும்.

இவ்வாறாக, ஒருபுறம் ஏற்கெனவே திரட்டிய மூன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியே பயன்படுத்தாமல் இருக்கும்பட்சத்தில், புதிதாக ஒரு 'செஸ்' கொண்டுவருவதன் மீதான கேள்விக்கு ஆளாகிறது, மத்திய அரசு.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கடந்த ஐந்தாண்டுகளில் கச்சா எண்ணெய் மீது மட்டும் ரூ.74,164 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. பயன்படுத்தாமல் இருக்கும் இந்தத் தொகை மீது ஏன் செஸ் விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருப்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளலாம்.

- வாசு கார்த்தி