இந்தியா

ட்ரெண்டாகும் #pubgban ஹேஸ்டேக்: இந்தியாவில் ஏன் பப்ஜிக்கு தடை இல்லை?

ட்ரெண்டாகும் #pubgban ஹேஸ்டேக்: இந்தியாவில் ஏன் பப்ஜிக்கு தடை இல்லை?

webteam

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ-சாட் போன்ற செயலிகளும் தடை செய்யப்பட்டதில் அடக்கம். இதுதொடர்பாக மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த செயலிகள் தொடர்பாக நாட்டில் உள்ள குடிமக்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து டிக் டாக் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. டிக் டாக் இந்தியாவின் தலைவர் நிகில் காந்தியின் அறிக்கை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டிக்டாக் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில், “டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இணக்கமான நிலையை உருவாக்கும் செயலில் தற்போது ஈடுபட்டுள்ளோம்'' எனக் குறிப்பிட்டுள்ளது.

59 செயலிகள் தடை செய்யப்பட்டாலும் பப்ஜி குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் கிளம்பியுள்ளது. ட்விட்டரில் #pubgban என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆனால் மத்திய அரசு பப்ஜியை தடை செய்ய வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. ஏன்?

பாதுகாப்பு பிரச்னை:

59 செயலிகள் தடை செய்யப்பட்டதன் முதன் காரணமாக பாதுகாப்பு குறைபாடுதான்  சொல்லப்படுகிறது. தடை செய்யப்பபட்ட செயலிகள் மூலம் இந்திய பயனாளர்களின் தகவல்கள் திருடப்படலாம் என்ற குற்றச்சாட்டின் படி தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் பப்ஜி போன்ற கேம் தொடர்பான செயலியில் அந்த பிரச்னை இல்லை எனக் கூறப்படுகிறது. அதாவது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் பப்ஜியில் இல்லை என சொல்லப்படுகிறது.

சீனாவின் செயலிகள்:

மத்திய அரசு தடை செய்த 59 செயலிகளும் சீனாவில் உருவாக்கப்பட்டவை. அதாவது சீன செயலிகள் என்ற வகையில் இவை தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் பப்ஜி முழுவதும் சீனாவைச் சார்ந்த செயலி அல்ல. சீனாவைச் சேர்ந்த Tencent என்ற நிறுவனம் பப்ஜி உருவாக்கத்தின் பின்புலத்தில் இருந்தாலும் பப்ஜி தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. நேரடி சீன செயலி இல்லை என்பதாலும் பப்ஜி இந்தியாவில் தடை செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.