இந்திய நாட்டின் அடையாளம் அதன் மாநிலங்கள்தான். அதனால் தான் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு என போற்றப்பட்டு வருகிறது. விடுதலைக்கு பிறகு பிரிட்டிஷ் இந்தியா மற்றும் பல சமஸ்தானங்களும் மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. அதற்காகவே கடந்த 1956இல் பிரத்யேக சட்டம் இயற்றப்பட்டு இந்தியா 14 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய நாடாக இருந்தது. 1950 வாக்கிலும் மாநிலங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளன.
தற்போது அந்த எண்ணிக்கை 28 மாநிலங்களாகவும், 8 யூனியன் பிரதேசங்களாகவும் அதிகரித்துள்ளது. முதலில் மொழிவாரியாகவும், பிராந்திய வாரியாகவும் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மெட்ராஸ் மாகாணம் மொழிவாரியாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பிரிக்கப்பட்டதும் இந்த சட்டத்தின் அடிப்படையில் தான். அதன் பின்னர் சில பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து குரல் கொடுக்க ஆரம்பித்தனர். சில மாநிலங்கள் அரசியல் ஆதாயத்திற்காகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
அருணாச்சல பிரதேசம்
North-East Frontier Agency என இருந்த அருணாச்சல பிரதேசம் கடந்த 1972இல் யூனியன் பிரதேசமாகவும், பிறகு 1987 வாக்கில் மாநிலமாகவும் உருவாகியுள்ளது. சர்வதேச எல்லைகள் அடங்கியுள்ள பகுதியில் இந்த மாநிலம் அமைந்துள்ளதால் அதற்கு முன்னர் வரை வட கிழக்கு எல்லைப்புற முகமையாக இயங்கி வந்துள்ளது. மியான்மர், பூட்டான், சீனா மாதிரியான நாடுகளுடன் இந்த மாநிலத்தின் எல்லை பகுதி அமைந்துள்ளது.
சத்தீஸ்கர்
மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து கடந்த 2000மாவது ஆண்டு பிரிக்கப்பட்டது. 1920களில் சத்தீஸ்கர் மாநிலம் தனியாக பிரிக்கப்பட வேண்டுமென்ற குரல் எழுந்துள்ளது. தொடர்ந்து அரசியல் கட்சிகளும் தனி மாநிலம் குறித்து குரல் கொடுக்க சத்தீஸ்கர் உருவானது.
கோவா
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னதாக போர்ச்சுகீஸ் கட்டுப்பாட்டில் இருந்தது கோவா பிராந்தியம். இந்தியாவுடன் இந்த பிராந்தியத்தை இணைக்க போர்ச்சுகல் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. இந்தியாவுடன் கோவாவை இணைக்க போர்ச்சுகல் மறுக்க, இந்தியா ராணுவம் படையெடுத்து கோவா கைபற்றப்பட்டுள்ளது. பின்னர் யூனியன் பிரதேசமாக மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கோவா செயல்பட்டுள்ளது. கடந்த 1987 வாக்கில் மாநில அந்தஸ்த்தை கோவா எட்டியது.
மகாராஷ்டிரா - குஜராத்
1960இல் பம்பாய் மாகாணம் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அதன்படி உருவானதுதான் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலம் உருவாகி உள்ளது. இதே போல 1966 வாக்கில் கிழக்கு பஞ்சாப் பகுதி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சில பகுதிகள் இமாச்சல பிரதேசத்திறக்கும் ஒதுக்கப்பட்டது. 1971இல் இமாச்சல் மாநில அந்தஸ்த்தை பெற்றது.
ஜார்க்கண்ட்
தெற்கு பீகார் மாநிலத்தின் பகுதியாக இருந்த ஜார்க்கண்ட் இயற்கை வளங்கள் மிக்க பகுதியாக இருந்த போதும் பின்தங்கிய பகுதியாக இருந்துள்ளது. அதனால் தங்கள் பகுதியின் வளர்ச்சி வேண்டி அந்த பகுதியை சார்ந்த மக்கள் குரல் கொடுக்க, அதனுடன் அரசியல் கட்சிகளும் கைகோர்க்க 2000 வாக்கில் உருவானது ஜார்க்கண்ட்.
மணிப்பூர் மாநிலம் 1972இலும், அசாமிலிருந்து 1971இல் மிசோரம் மற்றும் 1972இல் மேகாலயா, 1961இல் நாகாலாந்து, தனிநாடாக இருந்த சிக்கிம் 1975 வாக்கிலும், யூனியன் பிரதேசமான திரிபுரா 1972இலும் மாநிலங்களாக உருவாகி உள்ளன. இதே போல உத்திர பிரதேச மாநிலத்திலிருந்து உத்தராகண்ட் மாநிலமும் 2000 வாக்கில் உருவாக்கப்பட்டது. தனி மாநிலமாக பிரிக்க வேண்டி இயக்கங்கள் கூட முன்னெடுக்கப்பட்டன.
தெலங்கானா மாநிலம்
தெலங்கானா மாநிலம் ஆந்திராவிலிருந்து கடந்த 2014இல் தனி மாநிலமாக உருவாக்கபட்டது. மொழிவாரி மாநிலமாக ஆந்திரா உருவாக்கப்பட்ட போதே தெலங்கானா மாநிலம் குறித்த கூறல்கள் எழத் தொடங்கி உள்ளன. மாநிலங்களில் இரு பகுதிகளுக்கு இடையே இருந்த ஏற்றத்தாழ்வே தெலுங்கானா மாநிலம் வேண்டி மக்களை குரல் கொடுக்க செய்துள்ளது. 2000க்கு பிறகு தனி மாநில பிரிப்பு வேண்டி குரல்கள் பரவலாக எழத் தொடங்கின. பிறகு நீண்ட நெடிய போராட்டத்தை அடுத்தே தெலங்கானா உதயமானது.
இப்போது கூட போடாலந்து, ஆவாதி பிரதேஷ், சவுராஸ்ஷடிரா மாதிரியான மாநிலங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டுமென்ற குரல் வலுத்து வருகிறது. இதில் புதிதாக ஒன்றுபட்ட தமிழ்நாட்டை கொங்குநாடு என பிரிப்பதாக பேச்சுகளும் எழுந்துள்ளன.