பிகார் இளம் அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் pt web
இந்தியா

பிகார் அரசியல் | மக்கள் தொடர்பே பிரதானம்.. ஆதிக்கம் செலுத்தும் மூத்த தலைவர்கள்?

2025 ஆம் ஆண்டு பிகார் தேர்தல் இளம் தலைமுறையினரின் செல்வாக்கு நிறைந்ததாக பார்க்கப்பட்டாலும், மூத்த தலைவர்களின் பங்களிப்பையும் ஓரங்கட்டப்பட முடியவில்லை.

PT WEB

இந்தியாவே எதிர்நோக்கிக் காத்திருக்கும் 243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பிகார் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஓரிரு வாரங்களே இருக்கின்றன. இந்நிலையில் பிகார் அரசியல் அடுத்த தலைமுறை இளைஞர்களால் புதிய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற கருத்து தொடர்ச்சியாக பிகாரைத் தாண்டி இந்திய அரசியல் களத்தில் பேசப்பட்டு வருகிறது.

பிகார்

காரணம், பிகார் அரசியல், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் (35), லோக் ஜனசக்தியின் (ராம் விலாஸ்) சிராக் பாஸ்வான் (43), காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக இருக்கும் கன்ஹையா குமார் ( 38), சாம்பவி சவுத்ரி (25) போன்ற இளம் தலைமுறை அரசியல்வாதிகளால் நிறைந்திருக்கிறது அரசியல் பிகார் தேர்தல் களம். இந்த மாற்றம் கட்சிகளையும், கொள்கைகளையும் மறுக் கட்டுமானம் செய்திருக்கிறது. சாதிதான் பிகார் அரசியலின் பிரதானமாக இருந்து வந்த நிலையில், வேலைவாய்ப்பு, கல்வி, முதலீடு போன்ற வளர்ச்சிக்கான அடிப்படைகளை இந்த இளம் தலைவர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும், வியூக வகுப்பாளராக இருந்து ஜன்சுராஜ் கட்சியை ஆரம்பித்திருக்கும் பிரசாந்த் கிஷாரை அடுத்த தலைமுறை அரசியலுக்கான முகமாக பெரும்பாலான பிகார் இளைஞர்கள் பார்த்து வருகிறார்கள். தொடர்ந்து, பிகார் அரசியலின் இருபெரும் முகங்களாக உள்ள லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ்குமாரின் கடைசி தேர்தலாக கூட இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இந்தக் கருத்து பல தரப்பினராலும் பேசப்படுகிறது.

ஆனால், உண்மையில் பிகார் மூத்த அரசியல் தலைவர்களில் செல்வாக்கு குறைகிறதா?

பிகார் அரசியலில் புதிய தலைமுறை ஆதிக்கம் நிறைந்திருப்பது உண்மை தான். பிகாரின் கொள்கை மறுக்கட்டுமானம் செய்யப்பட்டிருக்கிறது, இளம் தலைமுறையினரால் வளர்ச்சி மற்றும் சமூக நீதி கோட்பாடுகளைக் கொண்ட புதிய அரசியல் வடிவம் பிகார் அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது என்றாலும், அடிப்படை கட்டமைப்புகளைக் கொண்ட மூத்த அரசியல் தலைவர்களின் ஆதிக்கத்தை இளம் தலைவர்களின் அரசியல் வியூகங்களால் பறித்துவிட முடியவில்லை என்பதே நிதர்சனம்.

243 சட்டப்பேரவை தொகுதிகளில் 31 உறுப்பினர்கள் 70 வயதை கடந்தவர்களாக உள்ளனர். அவர்களின் செல்வாக்கு இன்னும் குறைந்து விடவில்லை. குறிப்பாக மற்ற மாநிலங்களைப் போல் மூத்த தலைவர்கள் சம்பிரதாயத்திற்காக செயல்படாமல், பிகார் அரசியலில் அவர்கள் முக்கியப்பதவிகளிலும் அமைச்சரவையிலும் இருப்பவர்களாக உள்ளனர்.

பைஜேந்திர பிரசாத் யாதவ் , பிரேம்குமார்

உதாரணமாக, ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் பைஜேந்திர பிரசாத் யாதவ் (79), பாஜகவின் பிரேம்குமார் (70) போன்றத் தலைவர்கள் மாறிவரும் அரசியல் சூழ்நிலையில், சாதி பிரதிநிதித்துவம் என அனைத்தையும் கடந்து, இன்றும் தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்தயவர்களாக இருக்கிறார்கள். தொடர்ந்து எட்டுமுறை இவர்கள் பிகார் சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த முறையும் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை தேர்தலில் வென்றால் 9 முறை தொடர்ந்து, பிகார் சட்டப்பேரவைக்கு நுழைந்தவர்களாக மாறுவார்கள். இந்நிலையில், இவர்களின் செல்வாக்கிற்கு காரணம் டிஜிட்டல் விளம்பரங்கள் என்பதையெல்லாம் தாண்டி நேரடியான மக்கள் தொடர்பே என்றும் “ வயது முக்கியமில்லை மக்களுடனான பிணைப்பு தான் முக்கியம்” என்றும் அரசியல் விமர்ச்சகர்கள் கூறுகின்றனர்.

பாஜகவை சார்ந்த உறுப்பினர் ஒருவர் கூறும்போது, "பிரேம்குமாரின் தொகுதி என்பது அவர் சார்ந்த கட்சியின் கோட்டை கிடையாது; அது அவரது கோட்டை" என்கிறார். இவ்வாறு, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், நரேந்திர நாராயண் யாதவ், பிகார் சட்டப் பேரவை தேர்தலில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ள விஜய் சவுத்ரி, ஏழு முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஷ்ரவன் குமார் மற்றும் ஷியாம் ரஜக் என்று பிகார் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் மூத்த தலைவர்களின் பெயர்கள் நீண்டுகொண்டே போகிறது. இவர்கள், தனிப்பட்ட தொடர்புகளின் மூலமும், நேரடியான மக்களின் நம்பிக்கைகளின் மூலமும் தங்களின் செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிகார்

இவ்வாறு, பிகார் அரசியலின் களம் மாறினாலும், பழைய சாதிய கட்டமைப்புகளில் ஊறியிருக்கும் பிகாரின் அரசியல் தூய்மைப்படுத்தபபடும் என இளம் தலைவர்கள் வளர்ச்சிக்கான அரசியலை பேசினாலும், தனக்கென ஒருக்கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கும் மூத்த தலைவர்களின் ஆதிக்கம் பிகார் அரசியலில் அப்படியே தான் இருக்கிறது.