heavy rain in Mumbai web
இந்தியா

டெல்லி, மும்பை, புனே.. வெள்ளத்தில் மிதப்பது ஏன்?

பருவநிலை மாற்றம், பழமையான வடிகால் அமைப்புகள், கான்கிரீட் நகர வளர்ச்சி சேர்ந்து டெல்லி, மும்பை, புனே போன்ற பெருநகரங்களை ஒவ்வொரு பருவமழையிலும் வெள்ளத்தில் மூழ்கச் செய்கின்றன

PT WEB

இந்தியாவின் முன்னணி பெருநகரங்களான மும்பை, புனே, மற்றும் டெல்லி-என்சிஆர் ஆகிய பகுதிகள் ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக் காலத்தில் கடுமையான வெள்ளப் பாதிப்புகளைச் சந்திப்பது தொடர்கதையாகி வருகிறது. அதற்கான காரணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக அண்மைக்காலமாக மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், பெய்யும் சில நாட்களிலேயே மிகத் தீவிரமான அல்லது மேகவெடிப்பு போன்ற மழைப்பொழிவு பதிவாகிறது. சில மணி நேரங்களிலேயே நூற்றுக்கணக்கான மில்லி மீட்டர் மழை கொட்டுவதால், அந்தத் தண்ணீரை உள்வாங்க முடியாமல் ஒட்டுமொத்த நகரமும் திணறுகிறது. டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களின் பெரும்பாலான மழைநீர் வடிகால் அமைப்புகள் பிரிட்டிஷ் காலத்திலோ அல்லது பல தசாப்தங்களுக்கு முன்போ வடிவமைக்கப்பட்டவையாகும். அவை மணிக்கு 25 முதல் 30 மில்லி மீட்டர் மழையை மட்டுமே தாங்கும் திறன் கொண்டவை. தற்போதைய மக்கள்தொகை பெருக்கம் மற்றும் அதீத மழைப்பொழிவுக்கு ஏற்ப இந்த வடிகால்கள் மேம்படுத்தப்படவில்லை.

Delhi flood

மேலும், நகரங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதால் ஏரிகள், குளங்கள், சதுப்புநிலங்கள் மற்றும் இயற்கை நீர்வழிப்பாதைகள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மண் மறைந்து கான்கிரீட் பரப்புகள் அதிகரித்துள்ளதால், மழைநீர் நிலத்தடிக்குள் உறிஞ்சப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டு, பெய்யும் மழைநீர் அனைத்தும் உடனடியாகச் சாலைகளுக்கு வந்து வெள்ளப்பெருக்கை உருவாக்குகிறது.

கடலோர நகரமான மும்பையில் பருவமழையின்போது கடல் மட்டம் உயர்கிறது. இதனால் நகரத்திலிருந்து வெளியேறும் மழைநீர் கடலுக்குள் செல்ல முடியாமல் மீண்டும் நகரத்திற்குள்ளேயே பின்னோக்கித் தள்ளப்படுகிறது. புனே போன்ற நகரங்களில் மலைப்பகுதிகளில் இருந்து வரும் உபரிநீர் மற்றும் ஆறுகளின் குறுக்கே உள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரால் குடியிருப்புப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.

Pune Flood

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நகரமயமாக்கல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முறையான திட்டமிடல் உள்ளிட்டவையே இத்தகைய பாதிப்புகளை பெருமளவு குறைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.