பாட்னாவில் உள்ள பாடலிபுத்ரா ரயில் நிலையத்தில், மதுவிலக்கு துறை தேர்வர்கள் போக்குவரத் சிரமங்களை எதிர்த்து நடத்திய போராட்டம் வன்முறையாக மாறி, ரயில் சேவை பாதிக்கப்பட்டது. கற்கள் வீச்சு, அதிகாரிகளுடன் மோதல் காரணமாக பலர் காயமடைந்தனர்.
செய்தியாளர்; M. மீரா
பீகார் காவல் துறையின் மதுவிலக்குத் துறை (Prohibition Department) பணி நியமனத் தேர்வுக்கான தேர்வர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியதால், பாட்னாவில் உள்ள பாடலிபுத்ரா ரயில் நிலையத்தில் வன்முறை வெடித்தது. நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு ரயில் போக்குவரத்தை நிறுத்தியதால் பாதுகாப்புப் பணியாளர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.
தேர்வு மையங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்குப் போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை என்று கூறி, ஏராளமான மாணவர்கள் ரயில் நிலையத்தில் திரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பதற்றம் அதிகரித்த நிலையில், போராட்டக்காரர்கள் ரயில் தண்டவாளத்தை மறித்து ரயில் போக்குவரத்தைத் தடுத்ததுடன், கற்களையும் வீசினர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சீரமைக்கக் காவல்துறையினரும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் முயன்றபோது நிலைமை மேலும் மோசமடைந்தது. கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினர். இச்சம்பவத்தின்போது ஏற்பட்ட மோதல்களில் பல அதிகாரிகள் லேசான காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில் பாதையில் போராட்டம் நடத்தியவர்களை அகற்றி, ரயில் சேவையை மீண்டும் தொடங்க ரயில்வே பாதுகாப்புப் படை (RPF), அரசு ரயில்வே காவல் படை (GRP) மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனால் ரயில் சேவை மீண்டும் துவக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.