சென்னையில் பிறந்து, ஏஐ (AI) தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் கொள்கைகளைத் தீர்மானித்த ஒரு தமிழர், திடீரென தனது வெள்ளை மாளிகை பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர்தான் அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசாங்கத்தின் ஏஐ கொள்கைக்கான மூத்த ஆலோசகர் ஸ்ரீராம் கிருஷ்ணன். வரும் ஜூன் மாத இறுதியோடு அவர் விலகப்போவதாக அறிவித்துள்ளது சர்வதேச தொழில்நுட்ப உலகில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்க மக்களுக்குச் சேவை செய்யக் கிடைத்த இந்த வாய்ப்பு தன் வாழ்நாளின் பாக்கியம் என்றும், அதிபர் டிரம்பின் தலைமை இல்லையென்றால் ஏஐ போட்டியில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்திருக்க முடியாது என்றும் நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
கடந்த 18 மாதங்களாகப் பதவியில் இருந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், தான் விலகுவதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவையான மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் கம்ப்யூட்டர் தரவு மையங்கள் சார்ந்த சவால்களைச் சமாளிக்க, புதிய நிறுவனங்களை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னால், ஒரு சிறிய ஓய்வு எடுக்கப் போவதாகவும் கூறியுள்ளார். அவர் விலகினாலும், அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து தொடர்ந்து ஆலோசனை வழங்கும் வெளிப்புற ஆலோசகராக நீடிப்பார் என்று டிரம்ப் நிர்வாகத்தின் டேவிட் சாக்ஸ் (David Sacks) தெரிவித்துள்ளார்.
டிரம்ப் ஆட்சியில் ஸ்ரீராம் கிருஷ்ணன், அமெரிக்க ஏஐ செயல் திட்டம் போன்ற முக்கியக் கொள்கைகளை உருவாக்கினார். அரசுத் தடைகளை நீக்கி, கூகுள், மைக்ரோசாப்ட் , எலான் மஸ்க்கின் எக்ஸ்ஏஐ (xAI) போன்ற நிறுவனங்களின் புதிய ஏஐ மாடல்களைப் பொதுமக்களுக்கு வெளியிடும் முன்பே, அதன் இணையப் பாதுகாப்பை அமெரிக்க அரசு சோதிப்பதற்கான முக்கிய ஒப்பந்தத்தையும் சாத்தியமாக்கினார். இவரது திறமையைப் பாராட்டிய அதிபர் டிரம்ப், "அவர் இல்லையென்றால் ஏஐ வேலைகள் எதுவும் இவ்வளவு சிறப்பாக நடந்திருக்காது" என்று முன்பு பாராட்டியிருந்தார்.
இருப்பினும், ஏஐ-க்கு அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது என்ற இவரது கொள்கை, அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு போய்விடும் என்று அஞ்சிய டிரம்பின் தீவிர ஆதரவாளர்களான மேகா (MAGA) இயக்கத்தைச் சேர்ந்த லாரா லூமர் (Laura Loomer) போன்றவர்களுடன் இவருக்குக் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது.
சென்னையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, எஸ்.ஆர்.எம் கல்லூரியில் படித்து, மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற முன்னணி நிறுவனங்களில் உயர்பதவி வகித்து, எலான் மஸ்க்கின் நெருங்கிய ஆலோசகராக உயர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனின் அடுத்த கட்ட நகர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.