காஷ்மீரை இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜம்மு காஷ்மீர் என அமெரிக்கா கூறியதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், இந்தியா அமைதி காப்பது தேசிய பாதுகாப்பு, இறையாண்மை, ஆகியவற்றை விட்டுக்கொடுக்கும் நடவடிக்கை என கூறினார். அமெரிக்க மண்ணில் பிரதமர் இருந்தபோது அமெரிக்க அரசு இந்த அறிக்கையை வெளியிட்டும் பிரதமர் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என அவர் வினவினார். பாஜக ஏன் அமைதியாக இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதன் மூலம் தேச நலன் முற்றாக அடகு வைக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இடையேயான சந்திப்புக்கு சில மணி நேரத்திற்கு முன் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அமெரிக்கா அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் இந்தியாவில் நிர்வகிக்கப்படும் ஜம்மு காஷ்மீர் என குறிப்பிடப்பட்டிருந்தது.