ரேகா குப்தா எக்ஸ் தளம்
இந்தியா

டெல்லி | முதல்வரான ரேகா குப்தா.. பாஜக தேர்வு செய்தது எப்படி?

டெல்லி முதல்வராக ரேகா குப்தாவை, பாஜக தலைமை தேர்வு செய்தது எப்படி என இணையத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Prakash J

தலைநகர் டெல்லிக்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் அபார வெற்றிபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிந்து 10 நாட்கள் இழுபறிக்குப் பிறகு, டெல்லியின் புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு நேற்று இரவு வெளியானது. அதன்படி, நேற்று இரவு நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்வாகியுள்ள ரேகா குப்தா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, இன்று அவர் டெல்லி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, முதல்வர் ரேஸில் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, ஆஷிஷ் சூட் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. அதிலும் பர்வேஷ் வர்மாவே முதலிடத்தில் இருந்தார். இந்தச் சூழலில் ரேகா குப்தா திடீரென தேர்வு செய்யப்பட்டது எப்படி என்பது குறித்தே பலரும் இணையதளங்களைத் தேட ஆரம்பித்துள்ளனர். அவர் தேர்வு செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து நாம் இங்கே பார்ப்போம்.

ரேகா குப்தா

அதன்படி, முதலாவதாக டெல்லி முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டது, பாஜகவின் தேர்தல் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த பெண் வாக்காளர்களின் ஆதரவை ஒருங்கிணைப்பதற்கான அதன் உத்தியைக் காட்டுகிறது. அடுத்து, தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பெண் வாக்காளர்களை நம்பியிருக்கும் பாஜக, ஆனால் அவர்களை முதல்வர்களாக நியமிப்பதில்லை என்ற கருத்தைத் தகர்த்தெறியும் வகையில் அவர் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாட்டில் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜியைத் தவிர, வேறு எங்கும் பெண் முதல்வர் இல்லை. ஆக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாஜக இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில், பெண் முதல்வர்களின் மரபைக் கட்டமைக்க பாஜக முயற்சித்துள்ளது. மேலும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவிக்காலத்தை ஒரு மாறுபாடாகவும், பிறழ்ச்சியாகவும் காட்டுவதில் துணை நிற்க முயல்கிறது. காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித்தின் 15 ஆண்டுகால ஆட்சி உட்பட, டெல்லி பல பெண் முதலமைச்சர்களைக் கண்டுள்ளது. அந்த வகையிலும் குப்தா தேர்வு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தலைநகரிலேயே பெண்களுக்கு உரிய மரியாதை தரப்பட்டிருப்பதால், அக்கட்சி வரும் தேர்தல்களில் இன்னும் பெண்களைக் கவர முடியும் என்று எண்ணுவதாகவும் கூறப்படுகிறது.

ரேகா குப்தா, பர்வேஷ் வர்மா

இவற்றைத் தவிர, ரேகா குப்தா பனியா சமூகத்தைச் சேர்ந்தவர். இப்பிரிவினர் டெல்லியில் முதன்மையாக வர்த்தகர்களாக உள்ளனர். பாஜகவின் டெல்லி பிரிவின் முதுகெலும்பாக பனியாக்கள் இருந்துள்ளனர். குறிப்பாக மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான அத்வானி ஆகியோர் சகாப்தத்திலிருந்தே வணிகர் சமூகத்தினர் அக்கட்சியின் முக்கிய வாக்காளர்களாக இருந்து வருகின்றனர்.

அடுத்து, டெல்லி பாஜக தலைவர்கள் ரமேஷ் பிதுரி மற்றும் பர்வேஷ் வர்மா போன்ற தலைவர்களைப் போலல்லாமல், ரேகா குப்தா எந்த பெரிய சர்ச்சையையும் சந்திக்கவில்லை. அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாததால் சட்டமன்றத் தேர்தலில் குப்தா ஒரு புதிய முகமாகவும் திகழ்ந்தார். மேலும் ரேகா குப்தா கட்சியில் மூத்தவராக உள்ளார். அவர் கட்சித் தரவரிசையில் படிப்படியாக உயர்ந்து, 30 வருடங்களுக்கும் மேலாக பாஜகவுடன் தொடர்புடையவராக உள்ளார். இதன் காரணமாகவே, அவரை பெண் என்ற முறையிலும் புதிய முகம் என்ற முறையிலும் அவரைத் தேர்வு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.