பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் கமிட்டி குழுக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பெயர், பொருளாதார விவகாரம் மற்றும் பாதுகாப்புத்துறை ஆகிய இரண்டு அமைச்சரவை குழுக்களில் மட்டுமே முதலில் இடம் பெற்றிருந்தது. இது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், மாற்றி அமைக்கப்பட்ட பட்டியலில் பொருளாதார விவகாரம், அரசியல் விவகாரம், பாதுகாப்பு, முதலீடு மற்றும் வளர்ச்சி, வேலை வாய்ப்பு மற்றும் திறன்மேம்பாடு, நாடாளுமன்ற விவகாரம் ஆகிய ஆறு அமைச்சரவை குழுக் களில் ராஜ்நாத் சிங் பெயர் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் கேபினட் கமிட்டி என்றால் என்ன? அவை என்னென்ன முடிவுகளை எடுக்கும்? என்பது பற்றி பார்ப்போம்.
இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 77(3), இந்திய அரசின் செயல்பாட்டிற்கும் அமைச்சர்களின் செயல்பாட்டிற்கும் விதிகளை அமைக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் வழங்கி இருக்கிறது. இதன்படி 'Transaction of Business Rules 1961' மற்றும் ‘Allocation of Business Rules 1961’ என்னும் விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிகளின்படி மத்திய அமைச்சரவை செயல்பட்டுவருகிறது. சில விவகாரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் சம்பந்தப்படும் போது, கேபினட் கமிட்டி கூடி முடிவுகளை எடுக்கவேண்டும் என்று இந்த விதி சொல்கிறது. அதன் படி பிரதமர் கேபினட் கமிட்டிகளை அமைப்பது வழக்கம். இதையடுத்தே பிரதமர் இப்போது 8 கேபினட் கமிட்டிகளை அமைத்துள்ளார்.
நியமன கேபினட் கமிட்டி:
கேபினட் கமிட்டிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது நியமனத்திற்கான கமிட்டிதான். இதில் மத்திய அரசின் முக்கிய பதவிகள் மற்றும் முப்படை தளபதிகள் நியமனம், ரிசர்வ் வங்கி ஆளுநர் நியமனம் போன்ற பல முக்கிய நியமனங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும்.
இடவசதி (Accomodation)கேபினட் கமிட்டி:
இடவசதிக்கான கேபினட் கமிட்டி அரசின் இடங்களை ஒதுக்குவது குறித்து விதிகள் அமைப்பது, முடிவு எடுப்பது போன்றவற்றை ஆலோசிக்கும். அத்துடன் இந்த கமிட்டி அரசு கட்டடங்களை நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவது மற்றும் அதற்கான வாடகை தொகையை தீர்மானிப்பது குறித்தும் முடிவு எடுக்கும். அதேபோல மத்திய அரசு அலுவலகங்களை டெல்லிக்கு வெளியில் மாற்றுவதற்கு இந்தக் கமிட்டி ஒப்புதல் தரும்.
பொருளாதார விவகாரங்கள் கேபினட் கமிட்டி:
பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி, நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் பொருளாதாரத்தில் இருக்கும் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கும். அத்துடன் இந்தக் கமிட்டி விவசாய பொருட்களுக்கான விலை நிர்ணயம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும். மேலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பது, ஊரக வளர்ச்சி மற்றும் பொது விநியோகம் திட்டம் ஆகியவை குறித்து முடிவு எடுக்கும்.
நாடாளுமன்ற விவகாரங்கள் கேபினட் கமிட்டி:
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரை தீர்மானிக்கும். அத்துடன் நாடாளுமன்றத்தில் அரசின் சட்ட முன்வரைவு மற்றும் அரசின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து விவாதித்து முடிவு எடுக்கும். கேபினட் கமிட்டிகளில் இந்த ஒரு கேபினட் கமிட்டி தான், மத்திய உள்துறை அமைச்சரின் தலைமையில் செயல்படும்.
பாதுகாப்பிற்கான கேபினட் கமிட்டி:
பாதுக்கப்பிற்கான கேபினட் கமிட்டி சட்டம் ஒழுங்கு, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கொள்கை முடிவுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கும். அத்துடன் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களையும் இந்த கமிட்டி ஆலோசித்து முடிவு எடுக்கும். மேலும் பாதுகாப்பு துறையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகள் செய்ய இந்தக் கேபினட் கமிட்டி ஒப்புதல் அளிக்கும். பாதுகாப்பு உபகர ணங்கள் கையகப்படுத்துதல், பாதுகாப்பு ஆராய்ச்சி ஆகியவை குறித்து இந்த கமிட்டி முடிவு எடுக்கும்.
முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான கேபினட் கமிட்டி:
இந்த கேபினட் கமிட்டி, நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய முதலீட்டு திட்டங்களை ஆராய்ந்து அவற்றை விரைவில் முடிக்க தேவையான முடிவுகளை எடுக்கும். அத்துடன் உற்பத்தி மற்றும் கட்டுமானம் தொடர்பான திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும். மேலும் முதலீடுகள் மற்றும் கட்டுமானம் ஆகியவற்றிற்கு தேவையான துறைகளின் அனுமதி பெறுவது குறித்தும் கண்காணிக்கும்.
வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான கேபினட் கமிட்டி:
இந்த கமிட்டி , திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த திட்டங்களின் செயல்பாடுகளை பார்வையிடும். அத்துடன் நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிப்பது மற்றும் திறன் வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும் முடிவு எடுக்கும்.
இந்த கேபினட் கமிட்டிகள் மட்டுமில்லாமல், தேவைப்பட்டால் பிரதமர் தற்காலிக கமிட்டிகளை அமைப்பதற்கும் அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.