இந்தியா

அரசின் தடுப்பூசி கொள்கையை எங்களால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை: டெல்லி உயர் நீதிமன்றம்

அரசின் தடுப்பூசி கொள்கையை எங்களால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை: டெல்லி உயர் நீதிமன்றம்

நிவேதா ஜெகராஜா

கொரோனாவின் இரண்டாவது அலையில், இளைஞர்கள் பலரும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். ஆகவே பல மாநிலங்களிலும் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி முன்னுரிமை, பெரும்பாலும் வயதானவர்களுகே தரப்படுகிறது எனக்கூறி, அதுபற்றி டெல்லி  உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தங்களின் இந்த கருத்தை, ‘வயதானவர்களின் உயிர் முக்கியமல்ல’ என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளனர் நீதிபதிகள். ‘எப்படி ஒவ்வொரு வீட்டிலும் முதியோருக்கு தரப்படும் மரியாதையில் குறை ஏற்படவே கூடாதோ, அப்படி வயதானவர்களின் உயிர்களை மதிப்பதிலும் குறை கிடையாது’ எனக்கூறப்பட்டுள்ளது.

நீதிபதி சங்கி இதுபற்றி பேசும்போது, “இந்த இரண்டாவது அலையில், அதிகம் பாதிக்கப்படுவது, இளைய தலைமுறைதான். ஆனால் ஏனோ அவர்களுக்கு முன்னுரிமை தரப்படுவதில்லை. அரசின் இப்படியான தடுப்பூசி கொள்கையை, எங்களால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை” எனக்கூறியுள்ளார்.

மேலும், “அரசு தரப்பு, 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதாக சொன்னீர்கள். ஆனால், தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. இது தெரிந்தும், தடுப்பூசி போட அவர்களை வரவழைத்தது ஏன்? நாம் அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பாக அமைக்க வேண்டும். ஆனால், அவர்களை வழிதெரியாத திசையில் நாம் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.

அவர்களுக்கு தடுப்பூசி போட்டு, அவர்களை பாதுகாக்க தொடங்க வேண்டிய நாம், அவர்களுக்கு தடுப்பூசி முன்னுரிமை தராமல், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை தருகிறோம். அவர்கள், வாழ்ந்து முடித்தவர்கள். இளைஞர்களின் எதிர்காலம்தான் நீண்டது, அவர்கள் முன் நீண்ட பாதை உள்ளது. அதில் அவர்களை வாழ, இப்போது அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்”  எனக்கூறியுள்ளார்.

“அனைவரையுமே நாம் பாதுகாக்க வேண்டும் என்பதில், எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும் யாருக்கு முன்னுரிமை தரவேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். அந்தவகையில், இளைஞர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும்” என்று விளக்கம் கூறியுள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த, மத்திய அரசின் ஆலோசனைக்குழு இதுபற்றி பேசும்போது, ‘கடவுள்தான் நமக்கு உதவி செய்யவேண்டும்’ என்று சொல்லியிருந்தது. இந்தக் கருத்தை முன்னிறுத்தி ‘நாமேதான் நமக்கு உதவ முடியவில்லையென்றால், கடவுள் எப்படி உதவுவார்? அவரால் கூட உதவமுடியாது’ எனக் கூறியுள்ளார் நீதிபதி.

மேலும் பேசுகையில், “அரசு ஏன் இதற்கு தயக்கப்படுகிறது? முன்னோக்கிய சமுதாயத்தை உருவாக்க வேண்டியது, அரசின் கடமைதான். பிற நாடுகள் அனைத்தும் அதை செய்துவிட்டது. இத்தாலி நாட்டில், தங்கள் நாட்டு முதியோரிடம் ‘எங்களை மன்னித்துவிடுங்கள். வயதானவர்களுக்கு எங்களிடம் படுக்கை வசதி இல்லை’ என அந்நாட்டு அரசே கூறிவிட்டது” எனக்கூறியுள்லார்.

இவற்றோடு சேர்த்து, கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்து பற்றாக்குறை குறித்தும், டெல்லியின் கொரோனா கையாளுதல் குறித்தும் நீதிமன்றம் சில கருத்துகளை தெரிவித்துள்ளது.

தகவல் உறுதுணை : N