இந்தியா

“பேரனிடம் பாஸ்போர்ட் ஜாக்கிரதை” - ‘குணமா சொன்ன’ ஆனந்த் மகேந்திரா

“பேரனிடம் பாஸ்போர்ட் ஜாக்கிரதை” - ‘குணமா சொன்ன’ ஆனந்த் மகேந்திரா

webteam

தான் எப்போதும் தனது பாஸ்போர்ட்டை பேரன் கையில் சிக்கும் வகையில் வைப்பதில்லை என மகேந்திர குழும சேர்மேன் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

மகேந்திர வாகன குழுமத்தின் சேர்மேனாக இருப்பவர் ஆனந்த் மகேந்திரா. சமூக வலைத்தளமான ட்விட்டரில் உற்சாகமாக செயல்பட்டு வரும் இவர், தனது நிறுவனம் தொடர்பான ட்வீட்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் தனது நிறுவனத்தின் வாகனம் ஏதாவது சமூக வலைத்தளத்தில் வைரலானால், அதை உரியவரிடம் பேசி வாங்கி புதுப்பிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார். உதாரணமாக ‘காலா’ படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய மகேந்திரா வாகனத்தை படக்குழுவிடம் பேசி வாங்கினார். 

இந்நிலையில் இவர் ஒரு நகைச்சுவை கலந்து ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில், ஒரு பாஸ்போர்ட்டில் குழந்தை ஒன்று கிறுக்கியிருப்பது தெரிகிறது. அதனுடன் ஒரு சீனக் குழந்தை தனது தந்தையிடம் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கும் வகையில் அமர்ந்துள்ளது. இந்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஆனந்த், “இது விலைமதிப்பற்றது. எனக்கும் இதேபோல் கட்டுக்கடங்காத சேட்டை செய்யும் பேரன் இருக்கிறான். அவன் எங்களுடன் தான் தங்கியிருக்கிறான். நான் எப்போது எனது பாஸ்போர்ட்டை அவன் கையில் கிடைக்கும்படி வைப்பதில்லை. ஏனென்றால் இந்தச் சீனக் குழந்தை போல அவன் எங்கும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என நான் விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள நெட்டிசன்கள், இது 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் எனக்கூறியுள்ளனர். அத்துடன் பாஸ்போர்ட் நெகிழிக்கவரில் பாதுகாக்கப்பட்டிருக்கும், எனவே நீங்கள் வருந்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர். அத்துடன் சிலர் இந்தப் புகைப்படம் போலியானது எனவும் தெரிவித்துள்ளனர். மற்றும் சிலர் உண்மையோ ? பொய்யோ ? எப்படி இருந்தாலும் இந்தப் புகைப்படம் நகைச்சுவையாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.