CAG Report  AI
இந்தியா

மத்திய அரசு செலவினங்கள்.. ரூ. 54,000 கோடிக்கு கணக்கு இல்லை.. CAG வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

மறுபுறம், பயன்பாட்டு சான்றிதழ்கள் நிலுவையில் இருப்பது மட்டுமே நிதி மோசடி நடந்துவிட்டதாக அர்த்தமல்ல என்றும், அது நிர்வாக மற்றும் ஆவணப்படுத்தல் தாமதத்தைக் குறிக்கக்கூடும் என்றும் நிதி நிபுணர்கள் விளக்குகின்றனர்.

Premkumar S

இந்திய அரசின் கணக்குகளில் ரூ.54 ஆயிரம் கோடிக்கும் அதிகமான செலவினங்களுக்கான பயன்பாட்டுச் சான்றிதழ்கள் (Utilisation Certificates) இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவரத்தை, நாட்டின் உச்ச தணிக்கை அமைப்பான இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India) தனது சமீபத்திய அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.

பொது நிதி நிர்வாக விதிகளின்படி, மத்திய அரசு ஒதுக்கும் நிதி எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் பயன்பாட்டுச் சான்றிதழ்களை (Utilisation Certificates) சம்பந்தப்பட்ட அமைச்சகங்களும் துறைகளும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், 15 மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடமிருந்து ரூ.54 ஆயிரத்து 282 கோடி மதிப்பிலான 33,973 பயன்பாட்டுச் சான்றிதழ்கள் இன்னும் நிலுவையில் உள்ளதாக CAG வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், அந்த நிதிகள் அவற்றின் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்துக் கடுமையான கவலைகள் எழுந்துள்ளன.

Comptroller and Auditor General of India

கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட , மத்திய நிதி அமைச்சகத்தின் '2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் கணக்குகள் மீதான இந்தியத் தலைமைத் தணிக்கையாளரின் அறிக்கை' என்ற தலைப்பிலான அறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளியாயிடப்பட்டிருந்தன.

இருப்பினும், இந்த பணம் திருடப்பட்டுவிட்டது அல்லது காணாமல் போய்விட்டது என்று CAG கூறவில்லை. மாறாக, அரசு வழங்கிய நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்த வேண்டிய அதிகாரப்பூர்வ ஆவணங்கள்தான் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டுகிறது. அதாவது, செலவினங்களுக்கான கணக்கு முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதே தணிக்கையின் முக்கியக் கண்டுபிடிப்பு.

இந்த நிலுவைத் தொகையில், நகர்ப்புற வீட்டு வசதி அமைச்சகத்திலேயே சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கும், உயர்கல்வித் துறையில் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் பயன்பாட்டு சான்றிதழ்கள் நிலுவையில் உள்ளதாக CAG தெரிவித்துள்ளது. சில வழக்குகள் 1985-86ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருப்பதும் கவலைக்குரியதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், 12 ஆயிரத்து 754 கோடி ரூபாய் அளவிலான தவறான கணக்குப் பதிவு, 9 ஆயிரத்து 222 கோடி ரூபாய் செஸ் மற்றும் வரி நிதி உரிய நிதிகளுக்கு மாற்றப்படாதது, உள்ளிட்ட பல்வேறு நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாக குறைபாடுகளையும் CAG சுட்டிக்காட்டியுள்ளது.

நாடாளுமன்றம்

இந்த அறிக்கை தற்போது அரசியல் வட்டாரத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் நிதி வெளிப்படைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி வருகின்றன. மறுபுறம், பயன்பாட்டு சான்றிதழ்கள் நிலுவையில் இருப்பது மட்டுமே நிதி மோசடி நடந்துவிட்டதாக அர்த்தமல்ல என்றும், அது நிர்வாக மற்றும் ஆவணப்படுத்தல் தாமதத்தைக் குறிக்கக்கூடும் என்றும் நிதி நிபுணர்கள் விளக்குகின்றனர். எனினும், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விரிவான பதிலை வெளியிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.