இந்தியா

சர்ச்சை பாடல்கள், அரசியல் தோல்வி, துப்பாக்கி கலாசாரம் - யார் இந்த சித்து மூஸ்வாலா?

JustinDurai

சித்து மூஸ் வாலா துப்பாக்கி கலாசாரத்தை ஊக்குவிக்கும் விதமாக பாடல்களை பாடுவதாக சர்ச்சைகள் பல எழுந்ததுண்டு.

பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாப் பாடகர் சித்து மூஸ் வாலா (28). இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சித்து மூஸ்வாலா பாடகர் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு இருந்தார். காங்கிரஸ் கட்சியில் உள்ள அவர், கடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் புதிதாகப் ஆட்சிப் பொறுப்பேற்ற பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை வாபஸ் பெற்று வருகிறது. நேற்று முன்தினம் 420 விஐபிக்களின் பாதுகாப்பை வாபஸ் பெறுவதற்கான உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்தது. இதனால், சித்து மூஸ் வாலாவுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், மான்சா மாவட்டத்தில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தபோது சித்து மூஸ் வாலாவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரும், அவருடன் இருந்த 2 பேரும் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தனர். காவல்துறையினர் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே  சித்து மூஸ் வாலா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட வெறும் 24 மணி நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் அவரது ரசிகர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

சித்து மூஸ் வாலா படுகொலைக்கு இரங்கல் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அவரது ரசிகர்களை அமைதியாக காக்கும்படியும் இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது எனவும் உறுதியளித்துள்ளார்.

யார் இந்த சித்து மூஸ் வாலா?

சித்து மூஸ் வாலாவின் இயற்பெயர் சுப்தீப் சிங் சித்து. கடந்த 1993ம் ஆண்டு மூஸ் வாலா என்ற கிராமத்தில் பிறந்த இவர், பஞ்சாபில் பிரபல பாப் பாடகராக வலம் வந்தார். இதனால் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது பாடல்கள் பெரும்பாலும் சர்ச்சைக்கு பெயர் போனவை.  2019ஆம் ஆண்டு வெளியான அவரது பாடலான 'ஜட்டி ஜியோனே மோர் தி பண்டூக் வார்கி' என்ற பாடல் 18ஆம் நூற்றாண்டைச் சேந்த சீக்கிய போர்வீரர் மாய் பாகோவை மோசமாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து அவர் அதற்காக மன்னிப்பு கேட்டார்.

கடந்த மாதம் பலி ஆடு என்ற பாடலை வெளியிட்டார். அதில் ஆம் ஆத்மி கட்சியையும், அதன் ஆதரவாளர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து துரோகி என்று கூறியிருந்தார். துப்பாக்கி கலாசாரம், கேங் கலாசாரம் உள்ளிட்டவற்றை புகழந்து பாடுவதாக சித்து மூஸ் வாலா ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி உள்ளார். பாடல்கள் மூலம் வன்முறையை தூண்டுவதாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு கொரோனா சமயத்தில் துப்பாக்கியால் சுட்டதாக அவர் மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இசை மட்டுமின்றி அரசியலிலும் சித்து மூஸ் வாலா ஈடுபட்டார். கடந்த டிசம்பர் மாதம் காங்கிரஸில் இணைந்த அவர் இந்த ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மான்சா தொகுதியில் அக்கட்சி சார்பில் களமிறங்கினார். ஆனால், 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

இதையும் படிக்கலாம்: 'மூஸ்வாலா ரசிகர்கள் அமைதி காக்கவும்; குற்றவாளிகள் தப்ப முடியாது' - பஞ்சாப் முதல்வர் உறுதி