இந்தியா

`2022-ல் மட்டும் 15,000 பேராவது வெயிலால் இறந்திருப்பார்கள்’- WHO சொன்ன பகீர் தகவல்!

நிவேதா ஜெகராஜா

ஐரோப்பாவில் இந்த 2022-ம் ஆண்டில் இதுவரை மட்டும் சுமார் 15,000 பேர் அதீத வெப்பத்தால் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி நாடுகள், மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கண்டத்தை பொறுத்தவரை, இவ்வருடத்தில் ஜூன் – ஆகஸ்ட் வரை அதீத வெப்பம் இருந்துவந்தது. இந்த அதிக வெப்பநிலை, அக்கண்டம் கண்ட மிக மோசமான வறட்சிக்கும் வழிவகுத்தது. இதனால் ஏராளமான இறப்புகள் அங்கு ஏற்பட்டுள்ளன. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குநரான  Hans Kluge என்பவர் நேற்று தெரிவித்துள்ள தகவலின்படி, “பருவநிலையில் வெப்பம் அதிகரிக்கும்போது, நம் உடல் தன்னைத்தானே குளிர்விக்க முயல்வது இயல்பு. அப்படி முயலும்போது, உடலால அது  முடியாமல் போனால், இறப்புகூட ஏற்படலாம். அப்படியான இறப்புகள் தான் இப்போது ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் சில தற்போதுவரை எங்களுக்கு அளித்திருக்கும் தகவல்களின்படி, 2022-ம் ஆண்டில் வெப்பம் காரணமாக மட்டும் இதுவரை சுமார் 15,000 பேர் இங்கு இறந்துள்ளனர். அந்த வகையில் ஐரோப்பிய கோடைக்காலமான குறிப்பிட்ட அந்த மூன்று மாதங்களில் (ஜூன் - ஆகஸ்ட்), ஸ்பெயினில் சுமார் 4,000 இறப்புகளும், போர்சுகலில் 1,000-க்கும் மேற்பட்ட இறப்புகளும், ஐ.நா-வில் 3,200-க்கும் மேற்பட்ட இறப்புகளும், ஜெர்மனியில் 4,500 இறப்புகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கூடதலாக இன்னும் சில நாடுகள் தங்களின் தரவுகளை அளிக்கையில், இந்த எண்ணிக்கை இன்னும்கூட அதிகரிக்கலாம்” என்றுள்ளார்.

இதுமட்டுமன்றி பிரிட்டனில் முதல் முறையாக கடந்த ஜூன் – ஜூலை மாதங்களில் 40 டிகிரிக்கும் மேலாக வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது. அங்கு ஏற்பட்ட இறப்பையும் சேர்த்து கணக்கிட்டால், ஐரோப்பாவில் 24,000 இறப்புகள் பதிவாகுமென கணிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தை சீராக்க உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அதிகரித்து வரும் வெப்ப அலைகள் மற்றும் பிற தீவிர வானிலை மாற்றங்கள் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளில் இன்னும் ஏராளமான நோய்கள் மற்றும் இறப்புகள் ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.