நாட்டின் மிகப்பெரிய மாநில உத்தரப்பிரதேசத்தின் 32ஆவது முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்க உள்ளார்.
அரசியல் பயணம்
சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர்போன யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மக்களவைத் தொகுதி எம்பியாக 5ஆவது முறையாகப் பதவி வகித்து வருகிறார். கடந்த 1998ம் ஆண்டு தீவிர அரசியலில் இறங்கிய ஆதித்யநாத், அதே ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்தார். தனது 26 வயதில் எம்பியாகத் தேர்வான யோகி ஆதித்யநாத், 1990களில் ராமர் கோவில் விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்ட முன்னாள் எம்பி மஹந்த் ஆதித்யநாத்தை குருவாக ஏற்றுக்கொணடவர். இதனாலேயே தனது இயற்பெயரான அஜய் மோகன் பிஸ்ட் என்ற பெயரை யோகி ஆதித்யநாத் என்று அவர் மாற்றிக் கொண்டார். கடந்த 2004ம் ஆண்டு தேர்தலைத் தவிர பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை வசமாக்கிய யோகி ஆதித்யநாத், நடந்து முடிந்த உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்த சமாஜ்வாதிக் கட்சியின் வேட்பாளர் ஜமுனா நிஷாத்தை 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
சர்ச்சைகளும், வழக்குகளும்:
யோகி ஆதித்யநாத்தின் கருத்துகள் பல சமயங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பஞ்ச் ரூக்கியா கிராமத்தில் இருதரப்பினரிடையே பிரச்னைக்குரியதாக இருந்த சுடுகாட்டினை கைப்பற்றும் வகையில், அதை முற்றுகையிட்டு ஆலமரத்தினை நட்டனர் யோகி ஆதித்யாநாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள். இதனால் கலவரம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டதால், அவரைக் கைது செய்த கோட்வாலி பகுதி போலீசார், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த 2007ம் ஆண்டு ஜனவரியில் இந்து இளைஞர் கொலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தினை பொதுக்கூட்டம் ஒன்றில் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இதையடுத்து கோரக்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த கலவரத்தில் முஸ்லீம் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட யோகி ஆதித்யநாத், 2007ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக 15 நாள் சிறைவாசம் அனுபவித்தார். இந்த இரு வழக்குகளின் மீதான விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இவைதவிர லவ் ஜிஹாத் மற்றும் பசுவதை தொடர்பாக அவர் பேசிய கருத்துகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தின. இதுபோன்ற தொடர் சர்ச்சைகள் காரணமாகவே 5 முறை எம்பியான யோகி ஆதித்யநாத்துக்கு மோடி அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோரக்நாத் கோவிலின் தலைமை பூசாரி:
கடந்த 1994ம் ஆண்டில் தீட்சை பெற்ற யோகி ஆதித்யநாத், அவரது குருவின் மறைவுக்குப் பின்னர் 2014ம் ஆண்டில் கோரக்நாத் கோயிலின் தலைமை பூசாரியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். கோவில் மரபுப்படி, அவருக்கு காதணி அணிவிக்கப்பட்டுள்ளது.
முதலைமைச்சர் கோரிக்கை:
யோகி ஆதித்யநாத்தை உத்தரப்பிரதேச முதலமைச்சராக முன்னிறுத்த வேண்டும் என்று அயோத்தி மற்றும் கோரக்நாத் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த கூட்டங்கள் மூலமாக துறவிகள் கடந்த 2016ம் ஆண்டில் வலியுறுத்தினர். அவர் முதலமைச்சரானால்தான் அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட முடியும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை பாஜக தொடர்ந்து நிராகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், சமீபத்திய தேர்தலில் உத்தரப்பிரதேச பாஜகவின் அரசியல் யோகி ஆதித்யா நாத்தை மையமாகக் கொண்டே சுழன்றது என்பது அரசியல் விமர்சகர்களின் கோரிக்கை.