சபரிமலை எக்ஸ் தளம்
இந்தியா

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு|நன்கொடையாளர் கைது.. யார் இந்த உன்னிகிருஷ்ணன் போத்தி?

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் தகடுகள் மாயமான வழக்கில், நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

Prakash J

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் தகடுகள் மாயமான வழக்கில், நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019இல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்டபின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது. இந்த விவகாரம், பக்தர்கள் மற்றும் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கத்தின் எடை குறைந்ததில் உள்ள முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்க, நீதிபதிகள் ராஜா விஜயராகவன்.வி மற்றும் கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, 2019இல் சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள் மீதான தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளை தாமிரத் தகடுகளாக தவறாகப் பதிவு செய்ததாக, அப்போதைய நிர்வாக அதிகாரி பி.முராரி பாபுவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு இடைநீக்கம் செய்துள்ளது.

sabarimala

மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைத்தரகராகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் தேவசம்போர்டு துணை ஆணையர் முராரி பாபு, திருவிதாங்கூர் தேவசம் வாரிய செயலர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ்.பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவசம் போர்டு அதிகாரிகளே இந்த கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது அம்பலமாகியது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் தகடுகள் மாயமான வழக்கில், நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது செய்யப்பட்டுள்ளார். உன்னிகிருஷ்ணன் போத்தியை திருவனந்தபுரம் அருகே உள்ள அவருடைய வீட்டில் வைத்து கைது செய்த புலனாய்வுக் குழுவினர், பத்தனம்திட்டா அழைத்து வந்து 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

யார் இந்த உன்னிகிருஷ்ணன் போத்தி?

சபரிமலை தங்க திருட்டு வழக்கில் முக்கிய நபராகக் கைது செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் போத்தி, திருவனந்தபுரம் கிளிமானூர் அருகே உள்ள புலிமாத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர், ஒருகாலத்தில் சபரிமலை கோயிலில் இளைய பூசாரியாக சேருவதற்கு முன்பு தனது தந்தைக்கு புலிமாத் தேவி கோயிலில் உதவியாக இருந்தார். மேலும் பெங்களூருவில் உள்ள ஸ்ரீராமபுர ஐயப்பன் கோயில் உட்பட பல கோயில்களில் பணியாற்றியுள்ளார். தற்போது பெங்களூருவில் குடியேறியுள்ள இவர், கோயிலுக்கு காணிக்கை செலுத்தும் பணக்கார தொழிலதிபர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்ரீராம்புரா கோயிலில் உதவி பூசாரியாக பணியாற்றிய பின்னர், 2004ஆம் ஆண்டு அவர் தனது பூசாரிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உன்னிகிருஷ்ணன் போத்தி

வழக்கமான வருமான இல்லாத போத்திக்கு கணிசமான நிதி மற்றும் சொத்துகள் எவ்வாறு கிடைத்தன என்பதை அதிகாரிகள் இப்போது ஆய்வு செய்து வருகின்றனர். 2017 முதல் 2025 வரை அவரது வருமான வரி பதிவுகளில் நிலையான வணிக வருவாய் இல்லை என்பதைத் தரவுகள் காட்டுகின்றன. தேவசம் புலனாய்வு அறிக்கை, போத்தி தனிப்பட்ட முறையில் நிதியளித்ததாகக் கூறும் செலவுகள் உண்மையில் மற்றவர்களால் செலுத்தப்பட்டவை என்பதை வெளிப்படுத்துகிறது. தங்க முலாம் பூசப்பட்ட கதவிற்கு, கர்நாடகாவின் பல்லாரியைச் சேர்ந்த தொழிலதிபர் கோவர்தன் நிதியளித்ததாகவும், கோயிலின் செப்புப் பாயின் தங்க முலாம் பூசுவதற்கு பெங்களூருவைச் சேர்ந்த மலையாள தொழிலதிபர் அஜிகுமார் நிதியளித்ததாகவும் கூறப்படுகிறது.