மத்திய பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெறும் பட்சத்தில் கமல்நாத் அல்லது ஜோதிராதித்ய சிந்தியா ஆகிய இருவரில் ஒருவர் முதல்வராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மத்தியப் பிரசேத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சி நடத்தி வருகிறது. தற்போது முதலமைச்சராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 28-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் மத்திய பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெறும் பட்சத்தில் கமல்நாத் அல்லது ஜோதிராதித்ய சிந்தியா ஆகிய இருவரில் ஒருவர் முதல்வராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களின் பின்னணி குறித்து பார்க்கலாம்.
யார் இந்த கமல்நாத் ?
முன்னாள் மத்திய அமைச்சர், மக்களவையின் மிக மூத்த உறுப்பினர்களில் ஒருவர் என பெருமைகளை பெற்ற கமல்நாத் மத்திய பிரதேசத்தின் அடுத்த முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளார். 72 வயதான இவர் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் உள்ளார். நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் கமல்நாத், சிந்த்வாரா தொகுதியில் இருந்து 9 முறை மக்களவைக்கு தேர்வானவர். மத்திய அமைச்சரவையில் வர்த்தகம், ஜவுளி, சாலைப் போக்குவரத்து ஆகிய முக்கிய துறைகளை கவனித்த இவர் உள்ளூர் அரசியலிலும் வலிமை வாய்ந்தவராக திகழ்கிறார்.
யார் இந்த ஜோதிராதித்ய சிந்தியா ?
மூத்த தலைவர் என்ற முறையில் கமல்நாத் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ள நிலையில் 47 வயதான இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவும் அடுத்த முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மாதவ் ராவ் சிந்தியாவின் மகனான ஜோதிராதித்ய சிந்தியா குவாலியர் அரச குடும்ப உறுப்பினர் ஆவார். தற்போது சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை குழுவின் தலைவராகவும் சிந்தியா உள்ளார். காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர்களாக அறியப்படும் கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா இருவருமே தற்போது மக்களவை உறுப்பினர்களாக உள்ளனர். எனினும் சட்டப்பேரவை தேர்தலில் இருவருமே போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.