karnataka assembly
karnataka assembly twitter
இந்தியா

மூத்த தலைவர்களிடையே கடும் மோதல்; எதிர்க்கட்சித் தலைவரை தேர்வுசெய்ய முடியாமல் தடுமாறும் கர்நாடக பாஜக!

Prakash J

கர்நாடாகவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் சித்தராமையா மீண்டும் முதல்வராகவும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். காங்கிரஸ் பதவியேற்ற இந்த இரண்டு மாத ஆட்சியில், அக்கட்சி சொன்ன தேர்தல் வாக்குறுதிகளைக் கொஞ்சகொஞ்சமாக நிறைவேற்றி வருகிறது.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார்

இந்த நிலையில், கர்நாடகா சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஜூலை 3ஆம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை முடிவு செய்யாமலேயே பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குச் சென்றிருப்பதுதான் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு பாஜக மூத்த தலைவர்களிடையே கடும் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் அமைச்சர்கள் அரக ஞானேந்திரா, ஆர். அசோகா, விஜயபுரா எம்.எல்.ஏ. பசாகவுடா பாட்டீல், சோமண்ணா என பல பாஜக தலைவர்களின் பெயர்கள், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அடிபடுகிறது. ஆனால் ஒவ்வொருவருக்கும் எதிர்க்கோஷ்டியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால்தான் இன்றுவரை அதில் இழுபறி நீடித்துக்கொண்டிருக்கிறது.

பசவராஜ் பொம்மை

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நிலையில், சமீபத்தில் நடைபெற்றுப் பெற்று முடிந்த கர்நாடகாவில் ஆட்சியை இழந்தது பாஜகவுக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. காரணம், தென்னகத்தில் பாஜகவுக்கு அதிக அளவு ஆதரவு இருந்தது கர்நாடகத்தில்தான். தற்போது அங்கேயே தோல்வி முகம் கண்டிருப்பது பாஜக தலைமையையே கவலை கொள்ளச் செய்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், அந்த தோல்வியிலிருந்தே பாஜக தலைமை எழவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால்தான் அங்கே இன்னும் எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தவிர, அம்மாநிலத்தில் கோஷ்டிப் பூசலும் தலைவிரித்தாடுகிறது. அதேநேரத்தில், கர்நாடகாவில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாததையும் பாஜக தலைமை கவலைக்குரிய விஷயமாகவே பார்க்கிறது.

இதுகுறித்து கர்நாடக பாஜவினர், “முக்கியமாக, இந்த விஷயத்தில் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, லிங்காயத் இனத் தலைவர் பசவராஜ் பொம்மை, ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த ஆர்.அசோக் ஆகிய 3 பேரும் மோதல் போக்கைக் கொண்டுள்ளனர். ’லிங்காயத் சமூகத்திற்கு இரண்டு முக்கிய பதவிகளை பாஜக தலைமை வழங்க வேண்டும் எனவும், அதை தன் ஆதரவாளர்களுக்கே வழங்க வேண்டும்’ என பாஜக தலைமையிடம் எடியூரப்பா கோரிக்கை வைத்திருக்கிறார். இதனால்தான் இந்த இழுபறி நீடித்தவண்ணம் உள்ளது. தன் ஆதரவாளருக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும், மாநில பாஜக தலைவர் பதவியையும் வழங்க வேண்டும் என்பது அவரது எண்ணமாக உள்ளது.

எடியூரப்பா, பசவராஜ் பொம்மை

மேலும் இந்தப் பட்டியலில் அவரது மகனது பெயரும் அடிபடுகிறது. அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவி கேட்டிருப்பதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் அல்லது பாஜக மாநிலத் தலைவர் அல்லது துணைத் தலைவர்... இதில் ஏதாவது ஒன்றையாவது தன் ஆதரவாளர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எடியூரப்பாவின் பிரதான கோரிக்கையாக உள்ளதாம். இதற்கு எதிர்தரப்பினர் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால்தான் எடியூரப்பாவும் எதிர்தரப்புக்கு ஆதரவு தெரிவிக்காமல் இழுத்தடித்து வருகிறார்.

இப்படி, இருதரப்பும் எந்த முடிவிலும் சார்ந்து போகாததால்தான் எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் தலைமைக்கு தர்மசங்கடமாக இருக்கிறதாம். இவர்களின் சண்டையால் தலைமைக்கே தலைவலி உருவாகி இருக்கிறதாம். ஒருவேளை, இருதரப்பும் இந்த சமரசத்துக்கு தயாராக இல்லாத நிலையில், இரு பதவிகளுக்கும் தலா ஒரு முகாமில் இருந்து ஒருவரைக் கொடுத்து இரு பிரிவினரையும் மகிழ்விப்பது குறித்து மத்திய தலைமை ஆலோசித்து வருகிறதாம். இதுகுறித்து தலைமை எப்போது வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம்” என்கின்றனர், அவர்கள்.

Bjp-Congress

அதேநேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத சந்தோஷத்தில் கர்நாடகா காங்கிரஸ் அதிக சந்தோஷத்தில் இருக்கிறதாம். சட்டமன்ற கூட்டத்தொடரில் இரண்டு வாரங்களுக்கு மேலாக எதிர்க்கட்சி தலைவர் இல்லாமல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.