Sonam Wangchuk web
இந்தியா

டெல்லியில் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம்.. யார் இந்த சோனம் வாங்சுக்?

லடாக்கிய கலாசாரம் மற்றும் சூழலுக்கு ஏற்ற நடைமுறை வழி கல்வியை வழங்க 1988இல் 'லடாக் மாணவர்களின் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார்.

PT WEB

டெல்லி ஜந்தர் மந்தரில் இன்றுடன், 19ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார் சோனம் வாங்சுக். ஏன் போராட்டங்களை வாழ்க்கையாக்கிக் கொண்டார் வாங்சுக்?... பார்க்கலாம்...

நீட் (NEET) தேர்வு முறைகேடு புகார்கள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் லடாக்குக்கு பழங்குடி மாநில அந்தஸ்து மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் ஆறாம் அட்டவணைப் பாதுகாப்பை வலியுறுத்தியும் தொடர்ந்து 19ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்கிறார் சோனம் வாங்சுக்.

லடாக்கைச் சேர்ந்த 59 வயதான சோனம் வாங்சுக், ஒரு புகழ்பெற்ற பொறியாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கல்வி சீர்திருத்தவாதி. லடாக்கிய கலாசாரம் மற்றும் சூழலுக்கு ஏற்ற நடைமுறை வழி கல்வியை வழங்க 1988இல் 'லடாக் மாணவர்களின் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். இவரது 'ஆபரேஷன் நியூ ஹோப்' (Operation New Hope) திட்டத்தின் மூலம் லடாக் அரசுப் பள்ளிகளில் தோல்வி அடைந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பல மடங்கு உயர்ந்தது.

Sonam Wangchuk

குளிர்காலத்தில் வீணாகும் தண்ணீரைச் சேமித்து, செயற்கையான பனிப்பாறைகளை உருவாக்கி, கோடையில் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் 'ஐஸ் ஸ்தூபி' தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார். லடாக்கின் கடும் குளிரிலும் உறைந்துபோகாத வகையில், புதைபடிவ எரிபொருட்கள் இன்றி சூரியசக்தியால் இயங்கும் மண் வீடுகளை வடிவமைத்தார்.

கல்வி மற்றும் சமூகச் சேவைகளுக்காக இவருக்கு ஆசியாவின் உயரிய விருதான ‘ரமோன் மகசேசே ' (Ramon Magasaysay) வழங்கப்பட்டது. '3 இடியட்ஸ்' (3 Idiots) பாலிவுட் திரைப்படத்தில் ஆமிர் கான் ஏற்று நடித்த புன்சுக் வாங்டு' (Phunsukh Wangdu ) கதாபாத்திரம், இவரது நிஜ வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டதே ஆகும். ’3 இடியட்ஸ்’ திரைப்படத்தின் தமிழ் மறு ஆக்கமான ‘நண்பன்’ திரைப்படத்தில் நடிகரும் இன்றைய தமிழக முதல்வருமான விஜய், வான்சுக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கொசக்ஸி பசப்புகழ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sonam Wangchuk

2019இல் ஜம்மு காஷ்மீரிலிருந்து தனி ஒன்றிய பிரதேசமாக லடாக் பிரிக்கப்பட்டது. அதற்குப் பின் லடாக்கின் வளங்களைப் பாதுகாக்கவும் பூர்வகுடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், லடாக்கை பழங்குடி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையின் கீழ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காந்திய வழியில் தீவிரமாகப் போராடி வருகிறார் சோனம் வாங்சுக்

கடந்த ஆண்டு இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லிக்கு நடைப்பயணம் மேற்கொண்டபோது கைது செய்யப்பட்டார். ஜோத்பூர் சிறையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (NSA) அடைக்கப்பட்டு, 170 நாட்கள் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின் மார்ச் 14 அன்று விடுவிக்கப்பட்டார்.

Sonam Wangchuk

தற்போது லடாக் உரிமைகளுக்காக மட்டுமின்றி, கல்வித் துறை சீர்திருத்தங்களுக்காகவும் தனது உயிரைப் பணயம் வைத்துத் தொடர்ந்து போராடி வருகிறார்.